தளிர் 11

 




தளிர் : 11



"இளம் விளம்பர பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான அருணன் சம்ரித்தின் அந்தரங்க லீலைகள். மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் தகாத உறவு" என்று அவன் வீடு வந்து சேர்வதற்குள் காட்டு தீயாய் அந்த செய்தியை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருந்தது.


வெறும் செய்தியோடு நில்லாமல் அலங்கோலமான பல புகைப்படங்கள் அன்றைய உள்ளூர் முதல் ஆங்கில நாளிதழ்களின் முகப்பு பக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நிறைத்திருக்க, 


சமூக வலைத் தளங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றிலும் அவன் தான் அன்றைய காரசாரமான விவாதமாக போய் கொண்டிருந்தான்.


அருணன் வீட்டாருக்கும் பேரிடியாக இந்த செய்தி தலையில் விழ, நம்ப முடியா பார்வையை தான் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். 


வெறும் வாய்வழி செய்தியாக மட்டும் வெளியிட்டிருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான். ஆனால் அதில் காட்டும் புகைப்படங்களும், அவன் வீடு வந்து சேர்ந்த தோரணையும், நம்பிக்கை கொண்டவர்கள் மனதையும் அசைத்து தான் பார்த்தது.


"என்னங்க இதெல்லாம்??? இது எதுவும் உண்மை இல்ல… நான் நம்ப மாட்டேன். என் பையன் அப்படி இல்லைங்க" என்று பெத்த மனம் பரிதவிக்க, தாமோதரனிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பார்வதி.


"உன் புள்ளையை நம்ப முடியாது பார்வதி" என்ற கணவரை தீயாக முறைத்தவர், "ஏங்க நீங்களும் இந்த டிவிகாரங்க போடுற நியூஸ் எல்லாம் நம்புறீங்களா?" என்று ஆதங்கமாக கேட்க, அவரோ "ருக்ஷாவ எப்படி கூட்டிட்டு வந்தான்னு உனக்கு மறந்து போச்சா?" என்று தான் எதிர் கேள்வி கேட்டு மனைவியை அடக்கி வைத்தார். 


ஆறு மாத கருவை சுமந்து நிற்கும் பெண்ணை அழைத்து வந்து "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று அவன் சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ந்து தான் போனது.


பார்வதியோ, வெள்ளை வெளேரென பளிச்சென்று புன்னகைக்கும் பெண்ணை ஏற இறங்க பார்த்துக் கொண்டே மகன் அருகே வந்தவர், 


"என்ன டா? புள்ளதாச்சி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற?" என்று கேட்க,


அவனோ, "மாம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லல… கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னேன். நான் தான் இந்த குழந்தைக்கு அப்பா" என்று அசால்டாக சொன்னவனை மேலும் அதிர்ந்து பார்த்தவர்,


"எப்படி டா?" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே அவளை பார்க்க, ருக்ஷாவோ வாயெல்லாம் புன்னகையாக தலையை மேலும் கீழும் வேகமாக ஆட்ட, பார்வதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது.


ஒரே மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்த அவர் திட்டமிட்டிருக்க, அவனோ ஆறு மாத கருவுடன் அல்லவா அவருக்கு மருமகளை அழைத்து வந்தான்.


"அப்போவாது புள்ளத்தாச்சி பொண்ண கூட்டிட்டு வந்தான். இப்போ மூணு பிள்ளை பெத்தவளை… ச்ச… ஏங்க நம்ம புள்ளைக்கு புத்தி இப்படி போகுது. ஊரு உலகத்துல இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?" என்று மகனை திட்ட,


"யாருக்கு தெரியும் அந்த மூணு பிள்ளையும் அவன் பிள்ளையா கூட இருக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே அருகே அமர்ந்திருந்த அன்னையையும் அண்ணனையும் தாமோதரன் பார்க்க, அவர்கள் இருவரும் குழப்ப ரேகைகள் ஓட இறுகிய முகத்துடன் தான் அமைதியாக இருந்தனர்.


தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்ட மறுகணமே சுதர்சனாவை அவள் காப்பாளரிடம் கண்ணை காட்டி அழைத்துச் செல்ல சொல்லி இருந்தார் தாமோதரன்.


இங்கே பார்வதி புலம்பிக் கொண்டிருக்க, அந்நேரம் தான் கோசலை மகளுடன் வீடு வந்து சேர்ந்தார்.


அவரை கண்ட பார்வதியும் "அண்ணி… இந்த கொடுமையை பார்த்தீங்களா?" என்று கோசலையிடம் புலம்ப, அவர் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.


அவர் திட்டம் எல்லாம் தவிடு பொடியானதே! அந்த ஏமாற்றத்தில் இருந்தே அவர் இன்னும் மீளவில்லை.


காலையில் வெகு நேரமாக சுவாதி எண்ணுக்கு அழைத்து பார்த்தவர், அவள் போன் நெட்வொர்க் கவரேஜ் ஏரியாவுக்கு அப்பால் இருப்பதாக சொல்லவே, வாட்ச்மேன் எண்ணிற்கு அழைத்து "அருணன் இருக்கிறானா?" என்று கேட்டார்.


அவரும் அவன் கார் வெளியே நிற்பதை பார்த்து உறுதி செய்துக் கொண்டவர், "ஆமா, சார் இங்க தான் இருக்கார்" என்று சொல்லி இருக்க, 


தான் செய்வது கேவலமான செயல் தான் என்று அறிந்தாலும், அருணனிற்கு தன் மகளை மணமுடித்து கொடுப்பதில் தீர்க்கமாக இருந்தவர் கையாண்ட திட்டம் தான் பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து வர வைத்தது.


தப்பிக்க முடியா அளவிற்கு அவனை லாக் பண்ணி "அய்யோ என் பொண்ணு வாழ்க்கை போச்சே!" என்று கேமரா முன் நாடகமாடி, அவன் கையில் தாலியை கொடுத்து அப்போதே கட்ட சொல்லிடலாம் என்று தான் திட்டம் போட்டு இவர் அங்கு செல்ல, 


எல்லாம் தலை கீழாக அல்லவா நடந்து முடிந்திருந்தது. தண்ணீ பாய்ச்சியது ஒருத்தன் தேங்காய் பறிச்சது இன்னொருத்தன் கணக்கா… அவர் போட்ட திட்டத்தில் ராதிகா மாட்டிக் கொள்ள, "கைகாரி இவ எதுக்கு மாப்பிள்ளை ரூம்க்கு போனா?" என்று ராதிகாவை திட்டிக் கொண்டே,


"நான் பெத்தது எங்க போச்சு?" என்று மகளை தேட, அவளோ இரவு முழுதும் லிஃப்ட்டில் தூங்கி போனவள், காலையில் லிஃப்ட் வேலை செய்த பிறகு தான், வெளியே வந்தாள். 


அதே சமயம் பத்திரிக்கை கூட்டமும் சர சரவென உள்ளே நுழைந்திருக்க, அந்த கூட்டத்தில் போய் நைந்து சாகவா என்று ஓரமாகவே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.


கோசலையைக் கண்டவள் பாய்ந்துச் சென்று அவரை கட்டிக் கொண்டு அழ,


அவள் கண்ணீரை பார்த்தவருக்கு எதுவும் ஓடவில்லை. "என்ன மா ஆச்சு?" என்று பரிவாக கேட்க, அவளும் "நேத்து நைட் லிஃப்ட்ல…" என்று ஆரம்பித்தவள் கண்ணீரோடு சொல்லி முடித்தவற்றை நம்ப முடியாமல் பார்த்தாலும், மகள் எதையோ பார்த்துப் பயந்து போய் இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டவர், "ஒன்னுமில்ல டா… அதான் அம்மா வந்துட்டேன்ல" என்று அணைத்துக் கொண்டார்.


சுவாதியை ஆறுதல் படுத்துவதற்குள் அருணன் ராதிகாவை அழைத்துக் கொண்டு கிளம்பி இருக்க, அவரும் தான் வந்த தடமே தெரியாது வீடு வந்து சேர்ந்தார்.


"இந்த பையன் ஏன் இப்படி இருக்கான்னு எனக்கு கொஞ்சமும் புரியல… எத்தனை முறை சொல்லி இருப்போம் சுவாதியை கல்யாணம் பண்ணிக்கோனு, அப்போலாம் முடியாதுனு சொல்லிட்டு இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கானே?" என்ற பார்வதியால் மகன் செயலை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருந்தது.


கோசலையிடம் புலம்பிக் கொண்டிருந்தவர், அருகே அரண்டு நின்றிருந்த சுவாதியைப் பார்த்து, இந்த செய்தியால் தான் பிள்ளை முகம் வாடி போய் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டவர், "நீ கவலைப்படாத டா… இந்த பையன் உனக்கு வேணாம். வேற நல்ல ஒழுக்கமான பையனா அத்தை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று ஆதுரமாக அவள் தலையை வருட,


பல பேர் புலங்கியதானாலும் பரவாயில்லை எங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் என்று இந்த பிரச்சனையையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று தான் யோசித்துக் கொண்டிருந்தார் கோசலை.


"அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் அண்ணி. இப்போ அருண் எங்க?" என்று கேட்க,


"வந்தான். யாரும் ஏதும் கேட்டுருவோம்னு ரூம்ல போய் அடைச்சுக்கிட்டான்" என்று கோபமாக சொன்னவர், 


"சுவாதி ராத்திரி எங்க போய் இருந்த?" என்று கத்தி அவள் புறம் திரும்ப,


"அது அத்தை…" என்று பதில் சொல்ல போன மகள் கையைப் பிடித்து அழுத்தி தடுத்த கோசலை, "ப்ரெண்ட் வீட்டுக்கு நைட் ஸ்டடி போய் இருந்தா… இப்போ தான் நான் போய் கூட்டிட்டு வரேன்" என்றவரை சுவாதி புரியாமல் பார்த்து வைக்க, எதுவும் சொல்ல கூடாது என்பது போல் கண்ணை மட்டும் உருட்டினார் கோசலை.


இப்போது எதுவா இருந்தாலும் அண்ணி அண்ணி என்று தன் காலை சுற்றும் பார்வதிக்கு தான் செய்த காரியத்தால் தான் குடும்ப மானம் சந்தி சிரிக்கிறது என்பது மட்டும் தெரிந்தால், நிச்சயம் அவரை மன்னிக்க மாட்டார் அல்லவா! யாராக இருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தான் முதல் சாய்ஸாக இருக்கும். அதன் பிறகு தான் நீதி நியாயமெல்லாம் என்று எண்ணிய கோசலை இந்த நிலையை மாற்ற எண்ணி,


"என்ன இருந்தாலும், அவன் நம்ம வீட்டு பையன். இப்படியே விட்டா இன்னும் என்ன வேணாலும் நடக்கும். அதுக்குள்ள அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடணும்" என்ற கோசலையை 'இதுக்கு மேல இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்கணுமா?' என்னும் ரீதியில் பார்த்து வைத்த பார்வதியை பேசியே தன் வழிக்கு கொண்டு வந்திருந்தார் கோசலை.


இங்கே அரை மணி நேரமாக ஷவருக்கு அடியில் நின்றிருந்தவன், வெண்ணிறத் தேகமோ சில்லென்ற நீர் துளிகளால் சிவந்து மரத்து தான் போனது. ஆனாலும் மனதில் எரியும் நெருப்பு மட்டும் அணையவே இல்லை. எளிதில் தீர்வு காணும் தீயா அது.


கண்களை மூடினாலே அவள் வெற்று இடையில் விரல் தடம் பதிய தன்னோடு நெருக்கி கழுத்து எலும்பில் இதழ் பதித்தது தான் நினைவில் வந்து அவனை குற்றம் சாட்டியது.


பெண் பித்தன் அல்லவே அவன். தன் மனைவியன்றி வேறு பெண்களை கண்கள் தாண்டி கதைக்காதவன், இப்போது ஊரார் முன் காமூகனாகி போனான்.


'நானா இப்படி தரம் தாழ்ந்து நடந்துக் கொண்டேன்?' மருந்தின் தாக்கம் முழுதாக நீங்கி, அவன் சுயம் பெற்றதில் இருந்து அவன் மனம் இந்த கேள்வியை மட்டும் தான் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. 


எங்கேயோ தவறு நடந்து இருக்கிறது என்று மட்டும் தெளிவாக புரிந்துக் கொண்டான். 


துளியும் ராதிகா மீது சந்தேகமோ, கோபமோ இல்லை. சிறிய வருத்தம் மட்டும் தான். நான் சொன்ன போதே அவள் சென்றிருந்தால், இப்படி மற்றவர்கள் முன் தலைகுனிந்து நிற்கும் நிலை வந்திருக்காதே. (அவள் நடக்கும் நிலையிலே இல்லை என்பது அவன் எங்கனம் அறிவான்.)


இரண்டு வருடங்கள் அவளுடன் கழித்திருக்கிறான். எத்தனையோ இரவுகள், நேரம் கடந்தும் கூட அவர்கள் வேலை தொடர்ந்திருக்கிறது. தவறாக ஒரு பார்வையை கூட இருவரும் வீசிக் கொண்டதில்லையே.


சிந்தை முழுவதும் பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குற்றத்தை எப்படி சரி செய்வது? என்பதில் இருக்க, உணர்வுகள் மரத்து போன பிறகு தான் டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்தான். 


அறையில் இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவன், இடது பக்க மார்பில் அவள் பற்தடங்கள் கண்டு, தன்னை தானே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.


'சுயம் இழந்து ஒரு பெண்ணை தீண்டும் அளவிற்கு கட்டுப்பாடு இல்லாதவனா நான்?' அவன் மீதே கோபம் தான் வந்தது அவனுக்கு. தவறிழைத்தால் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் தானே! 


கண்ணாடி கூட அவன் அவளை ஆட்கொண்ட கதைகளை, பற்தடங்கள், நக கீறல்கள் வழி நினைவுப்படுத்த, அவன் கோபத்தின் சாயல் சிதறி விழுந்த கண்ணாடி துண்டுகள் ஒவ்வொன்றிலும் தெரிந்தது.


சொட் சொட்டென்று செந்நிற குருதி துளிகள், கையை பதம் பார்த்து உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளில் விழுந்து படிந்து பிரிந்துச் செல்ல, இந்த வலியை கூட பன்மடங்கு அனுபவித்தால், தான் ஏற்படுத்திய களங்கம் நீங்குமா? என்று தான் அவன் மனம் எண்ணியது.


இப்போது அவர்கள் வாழ்க்கை கூட இந்த உடைந்த கண்ணாடி போல் தானே…. சரி செய்தாலும் ரணமாக தொடரும் நினைவுகளை எப்படி சுகமாக்க போகிறான் என்று அவனுக்கும் அந்த நேரம் தெரியவில்லை.


கையில் குத்திக் கொண்டிருக்கும், கண்ணாடி துகள்களை நீக்கவும் சிந்தையில்லை, தரையை நனைக்கும் இரத்தத்தை நிறுத்தவும் அவன் யோசிக்கவில்லை. 


எப்படி இப்படி ஒரு நிகழ்வு நடந்தது? இப்போது வரை அவனால் யூகிக்க முடியவில்லை. மாற்றான் மனைவி என்று தெரிந்தும் கை வைத்திருக்கிறான். நினைக்கையிலே அருவருப்பாக இருந்தது. 


ஊராரின் கேள்விகளுக்கு முடங்கி போகும் ஆள் அல்ல தான் அவன். 'எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல' என்று கிலோ திமிரும், டன் கொழுப்பும் உடலின் ஒவ்வொரு இஞ்சிலும் கொட்டி கிடக்கும் ஆணவக்காரன் வாயடைத்து நிற்பதற்கு காரணம் தன்னவள் மீது கொண்டிருக்கும் காதல் தான்.


மனமும் சரி, உடலும் சரி என் ருக்ஷாவிடம் மட்டும் தான் மயங்கும் என்று ஆணவம் கொண்டவன் மயக்கம் கொண்டானோ மாயோள் மீது. ஆண் உடல் ஆட்டம் கண்டு போனதோ உரிமையில்லா பெண் தீண்டலில்.


அவனே சுய விமர்சனத்தில் மனதை ரணமாக்கிக் கொண்டிருக்க, இது போதாதென்று தெரிந்தவன், தெரியாதவன், நொந்தவன், வெந்தவன் எல்லாம் போன் போட்டு "சம்பவம் பண்ணா இப்படி தான் ஊர் உலகத்துக்கு தெரிய மாதிரி பண்றதா? பெரிய இடத்தில இருக்கிற ஆளுங்க பொண்ணு மேல கை வைக்கிறது தப்பில்ல தான். இருந்தாலும் மூணு பிள்ளை பெத்த பொம்பளைய போய்???" என்று ஆபாச கேள்விகள் கேலிகளாக செவியை நாரடிக்க, எதையும் மறுத்து பேசும் நிலையில் அவன் இல்லையே.


அந்த படங்கள் யாவும் பொய்யுமல்ல, அது இல்லையென்று அவன் மறுக்கவும் இல்லை. அதை நினைக்கையில் தன் மீதே வெறுப்பு தான் வந்தது. 


கண்களில் சிவப்பேறி நின்றவன் கரங்களே பூவுடலின் குளுமையை உணர்ந்த ஸ்பரிசம் இப்போதும் விரல்களில் உறைந்து இருக்க, "ச்ச…" என்று அந்த உணர்வை விரட்ட போராடியவன் கண்களை மூடிய இமை பொழுதில் கூட ஆடை கலைந்த அரைகுறை பெண்ணுடல் தான் அவன் மனக் கண்ணில் நிறைந்து நின்றது.


பட்டென்று கண்களை திறந்தவன் "ஆ ஆ ஆ…" என்று தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான். 


தன் நடத்தை மீது விழுந்த களங்கத்தை போக்கும் மார்க்கம் எண்ணி தான் அவன் மூளை அலை பாய்ந்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் யோசித்தவன்,


முடங்கி கிடந்தால் இன்னும் பல கதைகள் கட்டி குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்று எண்ணி, தயாராகி வெளி வர, அவன் உள்ளே நுழைந்த போது இருந்த வீட்டு ஆட்கள் யாரும் இப்போது இல்லை. எல்லாம் தனியாக மீட்டிங் போடச் சென்று விட்டார்கள் போல…


மனசாட்சிக்கு விலங்கு போட்டு வைத்திருப்பவன் ஆயிரம் தவறு செய்தாலும் தைரியமாக சுற்றுவான், அருணனுக்கு அவன் மனசாட்சியே அவனுக்கு எதிராக நிற்க, அறையில் இருந்து தயாராகி வந்தவனால் அதற்கு மேல் முடியாது, 


நடு ஹாலில் கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவன் இதயத்தில் எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது.


இன்னும் இன்னும் இதயம் வலித்தது. 'நடந்தவைகளை அழிக்கும் சக்தி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று புத்தாக்க யுக்தனின் மூளை யோசித்துக் கொண்டிருக்க, அவன் முன் ஒரு பத்திரிக்கையை விசிறி எறிந்தார் அவன் தந்தை தாமோதரன்.


"என்ன அருண் இதெல்லாம்? கல்யாணம் பண்ண சொன்னா துரைக்கு வலிக்குது, இதுக்கெல்லாம் மட்டும் இனிக்குதோ?" என்று வார்த்தைகளை கடித்து துப்பிய தந்தையை கண்களை இடுக்கி தீயாய் முறைத்து வைத்தான்.


"என் புள்ளை எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டான். அந்த சிறுக்கி தான் பணத்துக்கு திட்டம் போட்டு மாட்டி விட்டிருக்கா. நீ இருக்க உயரமும், வசதி வாய்ப்பும் இந்த மாதிரி கழிசடைகள் கண்ண உறுத்த தான் செய்யும். அதுக்கு தான் சொல்றேன் இனியும் தள்ளி போடாம கல்யாணம் பண்ணிக்கோயா" என்று கிடைத்த கேப்பில் மகனுக்கு திருமண விருந்து வைக்க அவன் அன்னை தூண்டில் போட முயன்றார். 


இது தான் தங்களுக்கான வாய்ப்பு என்று அவரை தூண்டி விட்ட கோசலையும் தன் மகளை இழுத்துக் கொண்டு அவர்கள் பேச்சினுள் நுழைந்தவர், "மருமகன் சம்மதம்னு ஒரு பார்வை பார்த்தா போதும். இந்த நிமிஷமே என் பொண்ணு அவருக்கு கழுத்த நீட்டுவா" என்று சொன்னவரை தீர்க்கமான பார்வை பார்த்த சம்ரித்.


"ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்ல, அனைவர் முகத்திலும் ஆனந்த தாண்டவம் இருவரை தவிர.


சம்மதம் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறியவன், வாசலில் காத்திருந்த பத்திரிக்கையாளர்களை கடந்து அலுவலகத்துக்குள் வர,


 "சார்… சார்… உங்களுக்கும் அந்த லேடிக்கும் தகாத உறவு இருக்கிறதா சொல்றது உண்மையா? உங்க பதில் என்ன?" என்ற கேள்விகளுக்கு 'ஆமானு சொன்னா என்ன பண்ணுவ? மூடிட்டு போ' என்பது போல் திமிராக ஒரு பார்வை பார்த்து, கையை வாய் அருகே வைத்து சைகை செய்து விட்டு, வேக எட்டுக்களுடன் உள்ளே நுழைய மீண்டும் போன் அடித்தது.


நடந்துக் கொண்டே போனை ஏற்று "ஹலோ" என்க, 


"சாம் உங்களுக்கு புதுசு புடிக்காது பூஜை போட்டது தான் பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அன்னைக்கு நான் அசிங்கப் பட்டு இருக்க மாட்டேன்ல. உங்களை ஆன்ட்டி ஹீரோனு அன்னைக்கு அவ சொன்னது புரியல… இப்போ புரியுது" ரசிஹாவின் குரல் எள்ளல், கேலி என்று எல்லாம் கலந்து ஒலிக்க, கோபத்தில் போனை வீசி எறிந்தவன் "ராதிகாஆஆஆ" என்று தான் கத்தியிருந்தான்.


எப்போதும் அவன் குரலுக்கு ஓடி வந்து நிற்கும் அவள் தான் இன்று இல்லையே. அது கூட அவன் கோபத்தை மட்டுப்படுத்த முடியாது அவன் திண்டாட காரணமாக அமைய, திரும்பும் பக்கம் எல்லாம் அவனை துரத்தியது முந்தைய நாள் நிகழ்வு.


ஆணவனுக்கே இந்த நிலை என்றால் அதை தாங்கி நிற்கும் பெண்ணின் நிலை?


விதியோ? சதியோ? மானம் கெட்டு ஒடுங்கி நின்றாள் தளிரவள்.

Comments

Popular posts from this blog

தளிர் 35

தளிர் மலரே ம(த)யங்காதே - 1

தளிர் 17