அதிரல் தாங்கும் பாதிரி எக்ஸட்ரா

 



எக்ஸ்ட்ரா 


ஐந்து வருடங்களுக்கு பிறகு.


அன்று செண்பகவள்ளிக்கு வளைகாப்பு. 


திருமனமண்டபத்தில் எல்லாரும் கூடி இருக்க, நடுநாயகமாக போடப்பட்டிருந்த ஒற்றை மெது மெது சோபாவில் தன் ஏழு மாத கருவை சுமந்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் செண்பகவள்ளி.


அவளே குழந்தை புள்ள, அவளுக்கு ஒரு குழந்தையா? என்று தான் எண்ண தோன்றியது அவள் உருவம்.


மனதில் முதிர்வு இல்லாமல் முகம் மட்டும் வயதின் முதிர்வை பிரதி பலிக்குமா என்ன?


என்றும் அவள் விக்ரமின் குழந்தை தான் போலும்.


மேடையில் அவள் அருகே சத்யன் அமர்ந்திருக்க, இருவருக்கும் சேர்த்து நலங்கு வைத்துக் கொண்டே, செண்பகா கையில் வளையல் அணிந்து சென்றார்கள் பெண்கள் அனைவரும்.


சிறிது நேரம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அமைதியாக இருந்த செண்பகாவோ, மெதுவாக சத்யன் தோளை சுரண்டிட, அவனும் “என்ன மா? ஏதாவது வேணுமா?” என்று அத்தனை அக்கறையாக கேட்டான்.


கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு ஏதேனும் உடல் உபாதையோ? ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதில் ஏதும் சிரமமோ? என்று அக்கறையாக அவன் கேட்டிட,


“ஆமா வேணும்” என்று வேகமாக தலையை ஆட்டியவள் சீர் வரிசை தட்டில் வைத்திருந்த லட்டுகளை கண்களால் காட்டி இளித்திட,


இங்கே சத்யனுக்கோ அவள் இருக்கும் நிலையில் அவளை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.


நல்லவேளை அவள் பிறப்பு சான்றிதழை காட்டி திருமணத்தை பதிவு செய்து விட்டான். இல்லையேல் அவள் நடவடிக்கைகள் யாவும் சமூக ஆர்வலர்கள் கண்களில் சிக்கினால், சிறார் திருமணம் என்று கம்பி என்ன வேண்டி வருமோ என்ற பயம் இப்போதும் அவனுக்கு இருக்கிறது.


“இப்பவே வேணுமா?” மனைவி ஒன்றோடு நிறுத்த மாட்டாளே, மொத்த இனிப்பையும் காலி செய்து தட்டை கவிழ்த்து வைத்தால் தானே அவள் உள்ளம் நிறையும்.


இந்த கூட்டத்தில் தட்டோடு அவள் ஐக்கியம் ஆகி, அவளை பார்த்து ஊர் சிரிக்கவா? என்ற தயக்கத்துடன் அவளை பார்த்தவன், “ஒரு அரை மணி நேரம் கழிச்சு எடுத்து தரேனே” வாத்தியாரை கெஞ்ச வைத்தால் அவன் மக்கு மனைவி.


“இப்பவே வேணும்.” என்று அவள் உதட்டை பிதுக்க,


அப்போது அவளுக்கு வளையல் அணிவிக்க வந்த நிலா இருவரின் குசு குசு பேச்சை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே, “என்ன?” என்று கேட்டாள்.


“உன் பிரண்டுக்கு இப்பவே லட்டு வேணுமாம்” என்றான் அவன் பாவமாக,


இதழ்கடையில் சிரித்துக் கொண்டே செண்பகாவை நிலா பார்க்க, “அவருக்காக பிள்ளை பெத்து தரேன். எனக்கு ஒரு லட்டு கூட எடுத்து தர மாட்றார்” என்று அவள் குற்ற பத்திரிகை வாசிக்க,


‘இப்போ உட்கார்ந்து சாப்பிட்டா நல்லாவா இருக்கும்?” என்று சத்யன் நியாயம் கேட்க,


இருவரையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த நிலாவோ, 


“ஆசை படுறால்ல சார்” என்று சொல்லிக் கொண்டே,


அங்கே நின்றிருந்த சத்யன் அண்ணிமார்களிடம், “செண்பாக்கு ரெஸ்ட் ரூம் போகணுமாம்” என்று மெதுவாக சொன்னவள், “கூட்டிட்டு போய்ட்டு வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு, 


செண்பகாவை கைபிடித்து அழைத்து சென்றவள், போகும் முன், “இவ்வளவு சீர் வரிசை வச்சிருந்தா, வளையல் போட வர்றவங்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்குமே, கொஞ்சம் எடுத்து உள்ள வச்சிடலாமா?” என்று சத்யன் அன்னைமார்களிடம் கேட்க,


அவர்களும் அது முறையில்லையே என்று தான் முதலில் மறுத்தார்கள்.


“கொஞ்சம் எடுத்து உள்ள வச்சிடலாம் மா. பாருங்க ஐம்பது தட்டு நடுவுல கவனமா கால் எடுத்து வச்சி வர்றாங்க” என்று சத்யன் நிலா திட்டத்திற்கு ஒத்து ஊதா,


அந்த மேடையில் மொத்த இடத்தையும் அடைத்து கொண்டிருந்த சீர் வரிசை தட்டுகளை பார்த்த சத்யன் அன்னையும், “அதுவும் சரி தான். வளையல் போட வர்றவங்களுக்கு கொஞ்சம் சிரமமா தான் இருக்கு” என்று அவர் மனமிறங்கிய நொடி,


செண்பகா நாவில் எச்சி ஊற பார்த்து வைத்த இனிப்பு தட்டுகள் எல்லாம் அவள் அறைக்கு பதுக்கல் செய்யப்பட்டது, கல்பனா, நந்தினி உதவியுடன்.


செண்பகா இறங்கி சென்றதும், சத்யனும் கீழே இறங்கி, மூன்று வயது குழந்தையை தோளில் தூக்கி வைத்திருந்த தன் நண்பன் அருகே வந்தான்.


“ஹே குட்டி” என்று சத்யன் விக்ரம் மகள் கன்னத்தை கிள்ளி கொஞ்சிட,


அவளோ, “போ சத்து நான் உன் கூட சண்டை, என்கூட விளையாட தம்பி பாப்பா வரும் வரும் சொல்லி என்னை ஏமாத்துர” என்று அவள் முறுக்கி கொள்ள,


“சீக்கிரம் வரும் டா” என்றான் சத்யன்.


“எப்போ வரும் நாளைக்கா?” 


“ஏய் குட்டி நாளைக்கே பாப்பா வந்தா அது குறை பிரசவம்” என்றபடி அவர்களுடன் இணைந்து கொண்டான் புது மாப்பிள்ளை நரேன்.


நரேனுக்கும், நந்தினிக்கும் இரண்டு மாதங்கள் முன்பு தான் திருமணம் நடந்து முடிந்தது.


பல்வேறு சிக்கல்கள், போராட்டங்கள் தாண்டியே அவளும் அவன் கரத்தினை பற்றி இருந்தாள்.


அத்தனை துயரங்களை கடந்தவர்கள் வாழ்க்கை இன்று மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருக்கிறது.


“குறை பிரசம்ன்னா என்ன?” என்று புரிய பாவம் காட்டினாள் குட்டி நிலா.


“அது…” என்று விளக்கம் சொல்ல நரேன் முழியை பிதுக்க,


“வீக் பாய் டா” என்றான் சத்யன் அவளுக்கு புரியும் படி.


“ஓ… அப்போ எப்போ வந்தா ஸ்ட்ராங் பாய் ஆவான்?” என்று குட்டி நிலா தகப்பன் தோளில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டே கேட்க,


“இன்னும் மூனு மாசத்துல வந்த்துடுவான்?”


மூனு மாசம்னா? இவ்வளவு வா என்று அவள் தன் பிஞ்சு கரத்தில் ஒரு விரலை நீட்டி காட்டிட,


இன்னும் இரண்டு விரல்களை அவள் கரத்தில் எடுத்து விரித்தவன் இவ்வளவு என்றான். 


“தம்பி பாப்பா பார்க்க இவ்வளவு ஆர்வமா? உங்க கூட விளையாட தான், வினி, விது இருக்காங்களே!” என்று கேட்டுக் கொண்டே விக்ரம் தோளில் இருந்து அவளை தன் தோளுக்கு மாற்றி கொண்டான் சத்யன்.


“தம்பியும் வேணும்” என்றாள் சிறியவள் கெஞ்சலாக.


இவர்கள் உரையாடல் இங்கே சென்று கொண்டிருக்கும் அந்த இடைவெளியில், வயிற்றை நிறைத்து விட்டு செண்பகாவும் வந்து சேர்ந்து விட, சத்யனை அழைத்து செல்ல ஆளும் வந்தது.


“சகல இங்க என்ன பண்ற? அங்க உன்னை கூப்பிடுறாங்க” என்று வேட்டியை மடித்து கட்டிக் கொண்டே அங்கே வந்த ராஜகுருவை அப்போது தான் பார்த்தான் விக்ரம்.


“இது?” என்று விக்ரம் ஒரு நிமிடம் புருவம் சுருக்கி யோசிக்க,


அவனை பார்த்த ராஜகுருவோ ஜர்க்காகி விட்டான்.


விக்ரம் பல வருடங்கள் கழித்து இன்று தான் தன் வாழ்வை மாற்றிய விதியவனை நேரில் காண்கிறான்.


ஆனால் ராஜகுருவுக்கு முன்னமே தெரியுமே.


கனகா வீட்டில் செண்பகவள்ளி தன் நண்பர்கள் நால்வருடனும் எடுத்த பல புகைப்படங்களை ஆல்பம் போட்டு வைத்திருக்க, அதில் இருந்த நிலாவை பார்த்தவன், 


“இந்த பொண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேனே” என்று யோசித்து, “ஆத்தி அவ ல்ல” என்று தெளிவு பெற்றவன், கனகாவிடம் அவளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டான்.


கனகாவும், செண்பகா தோழி என்று அறிமுகம் செய்து வைத்தவள், அவளின் அராஜக திருமணம் பற்றி சொல்லி, அந்த அராஜகாரனை கருணை இல்லாமல் வார்த்தை வதம் செய்திட,


“ஓஹோ, ச்ச ச்ச இப்படியெல்லாம் கூடவா மனுஷங்க இருப்பாங்க? வெறி பேட்” என்று மூன்றாம் மனிதன் போல் பரிதாபம் வேறு பட்டுக் கொண்டான்.


இத்தனை வருடத்தில் விக்ரம், நிலாவை சந்திக்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. அதனால் அவனும் அவர்களை மறந்தே போய் இருந்தான்.


இன்று செண்பகா விழாவுக்காக அனைவரும் கூடும் சூழல் ஏற்பட்டிருக்க, தொக்காக மாட்டிக் கொண்டான் நம் பெத்த ரவுடி.


விக்ரமை பார்த்தவன், “ஆத்தி… இவனா?” என்று எண்ணிக் கொண்டே எஸ்ஆகிட முயல,


“டேய்… உன்னை தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்” என்று அவன் சட்டை காலரை பிடித்திருந்தான் விக்ரம்.


“விக்ரம் என்ன பண்ற? அவரை விடு. கனகா ஹஸ்பண்ட் அவர்” என்று சத்யன் இடை புகுந்து ராஜகுரு கழுத்தில் இருந்த விக்ரம் கையை விலக்கி விட,


“கனகா ஹஸ்பண்டா?” என்று முகத்தை சுருக்கி அவனை பார்த்தான் விக்ரம்.


ராஜகுருவோ, ஹி ஹி என்று இளித்து கொண்டே, “என் பொண்டாட்டி மூனாது புள்ளைக்கு ஆய் கழுவ கூப்புடுறா” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நழுவ இருந்தவனை மீண்டும் பிடித்து கொண்ட விக்ரம்,


“எங்க ஓடுறீங்க சார். சத்யா இவர் யாரு தெரியுமா? எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச உத்தமர்” என்று சட்டென்று அவன் குட்டை உடைத்து விட,



சத்யனும் அவனை அதிர்ந்து பார்க்க,


‘மட்டி விட்டான் வெள்ளை பணியாரம்’ என்று கண்களை மூடி திறந்த ராஜகுருவோ,


பழைய கெத்தை மீட்டெடுத்து மிதப்பாக அவனைப் பார்த்து திரும்பியவன், “கையை எடுங்க பாஸ். மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சாலும், இப்போ புள்ளை குட்டியோட சந்தோசமா தானே இருக்கீங்க. நியாமா நீங்க எனக்கு கோவில் கட்டி கும்பிடனும். உங்களுக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள் நான்” என்று சுய பெருமை பேசியவனை,


கோபம் நீங்கி முறைத்தான் விக்ரம்.


உண்மை தானே! அவன் மட்டும் இல்லையென்றால் விக்ரம், நிலாவுக்கு இத்தனை அழகான குடும்பம் இருந்தும் இல்லா நிலையில் தானே வீண் கோபத்திலும், பிடிவாதத்திலும் தனித்து இருந்து இருப்பார்கள்.


ராஜகுரு சட்டையில் இருந்து விக்ரம் கையை எடுக்க,


“அந்த மரியாதை இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர முற்பட,


அவனை தெளியா முகத்துடன் பார்த்து கொண்டிருந்தான் நரேன்.


“டேய் தம்பி நீ ஏன் கரண்ட் கம்பியில கையை வச்ச மாதிரி நிற்கிற? நகரு” என்று விலக்கி விட்டு செல்ல இருந்தவனை,


“நானும் உங்களை எங்கேயோ பார்த்த போல இருக்கு” என்று யோசனையாக சொன்னவன், 


சட்டென்று நியாபாகம் வந்தவனாக, “என் வாழ்க்கையை கெடுத்ததும் நீங்க தான்” என்று சொல்ல,


“எதேய்! உன் மொகரையை பார்த்த போலவே இல்லையே டா” என்று புருவம் கண்களை விரித்தான் ராஜகுரு.


“ஹாங் நியாபகம் வந்துடுச்சு” என்று சொன்ன நரேன். 


“சத்யன் சார் அன்னைக்கு கல்யாண மண்டபத்தில இருந்து கனகா அக்காவை தூக்கிட்டு போனது இவர் தான்” என்று போட்டு கொடுக்க, 


செத்து மண்ணுக்குள் புதைத்த அருந்த பழைய ரகசியத்தை சொன்னால் அவனும் எப்படி தான் ரியாக்ட் பண்ணுவான்.


“”தெரியும்” என்றான் எந்த அலட்டலும் இல்லா குரலில்.


“தெரியுமா?” என்று நரேன் அவனை அதிர்ந்து பார்க்க,


“இவரை தான் கனகா கல்யாணம் பண்ணி இருக்காங்க” என்றான் சத்யன் அதே அலட்டலில்லா குரலில்.


“இவரையா?” என்று நரேன் மீண்டும் வாயை பிளக்க,


“எம்மா பெரிய வாய் கொஞ்சம் மூடுடா தம்பி” என்று அவன் வாயை தன் கரம் கொண்டு மூடி விட்ட ராஜகுருவுக்கும் அப்போது தான் நரேனை அன்று பார்த்தது நினைவு வந்தது.


அவனை வைத்து தானே கனகா போனில் இருந்து எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பி வைத்தான்.


“கல்யாண அன்னைக்கு என்கிட்ட தான் மெசேஜ் பண்ண சொல்லி கேட்டார். நானும் எதுவும் விசாரிக்காமல் அவர் சொன்னத டைப் பண்ணி கொடுத்துட்டேன். நான் அன்னைக்கு கொஞ்சம் உஷாரா இருந்திருந்தா?” என்று நரேன் சரண்டர் ஆகி விட,


இந்த சந்தோசம் எல்லாம் கிடைக்காமல் போய் இருக்கும். சில தவறுகளும், கவன குறைவும் கூட நல்லதுக்கு தான் போல என்று சொன்ன சத்யன் விழிகள் மேடையில் இரண்டு கன்னங்களிலும் சந்தணத்தை பூசிக் கொண்டு பிள்ளை பேறுக்கான பொலிவுடன் இருந்த தன் மனைவியை பார்த்துக் கொண்டே சொல்ல,


உண்மைதான் என்று நண்பன் சொல்லை ஏற்றுக் கொண்ட விக்ரம் விழிகளும் அவள் அருகே நின்றிருந்த அவன் தங்க பெண் மீது தான் காதலாக பதிந்து இருந்தது.


அப்போ நிஜமாவே நம்ம வாழ்க்கையின் விடி வெள்ளி இவர் தானா என்று கேட்ட நரேன் வாசம் நீங்க புது தாலியுடன் செண்பகாவுக்கு மறுபுறம் நின்றிருந்த நந்தினி மீது பதிய,


அப்போ நிஜமா நான் கடவுள் தானா? என்று கேட்ட ராஜகுருவை மூவரும் ஸ்லோ மோஷனில் திரும்பி பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன், இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கி வணக்கம் போட,


ஏதோ தீர்க்கதரிசி போல் தன்னை உணர்ந்து கொண்டிருந்த ராஜகுரு, தோளை இடித்து, இங்க என்ன பண்ணிட்டு இருக்க? இவளை கொஞ்சம் பிடி என்று அவன் சொன்னது போல் பேம்பர்சில் அசிங்க செய்து வைத்திருந்த அவர்கள் மூன்றாவது மகளை அவன் கையில் திணித்து விட்டு கையில் இரண்டு ஆண் பிள்ளைகளை பிடித்து கொண்டு மேடையை நோக்கி சென்றாள் கனகவள்ளி.


வணக்கம் போட்ட அவன் பக்தர்கள் இப்போது மூக்கை பிடித்து கொண்டு அவனை பார்த்து வைக்க,


என்ன? கடவுளா இருந்தாலும் பெத்த பிள்ளை கக்கா போனா கழுவி விட்டு தான் ஆகணும் என்று சொல்லி கொண்டே பாத்ரூம் நோக்கி சென்று விட்டான்.


வளைகாப்பு முடிய, செண்பகா வை அவள் பிறந்தகத்திற்கு வழி அனுப்பி வைத்து விட்டே, தன் பிள்ளைகளுடன் வீடு வந்து சேர்ந்தாள் நிலா.


ஆம் பிள்ளைகள் தான். 


ராஜன், கவியரசி என எல்லாரும் ஒரே வீட்டில் தான் தாமசம்.


அண்ணன், அண்ணி எப்போது அம்மா அப்பா ஆனார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.


தங்கள் பிள்ளை மண்ணில் உதிக்கும் முன்னமே வினிஷாவையும், வித்யுத்தையும் கவனித்து கொள்ளும் பொறுப்பை விக்ரம் நிலா ஏற்று கொண்டிருந்தார்கள்.


இயற்கையாகவே இருவருக்கும் அந்த அன்பும் வந்திருந்தது.


நிலா வாழ்வில் விக்ரம் இன்றி வேறு ஆண் நுழைந்திருந்தால், சிறுவர்கள் இருவரையும் ஏற்று இருப்பானா? என்பது சந்தேகம் தான்.


அதே போல் தான் விக்ரமுக்கும். இந்த பிள்ளைகளை காரணம் காட்டி தானே அவன் காதலி கூட விட்டு சென்றாள்.


அன்பான சொந்தங்கள் வரவில் அழகான வாழ்க்கை தான் அவர்களுக்கு.


பொன் மஞ்சள் மேகம் சூழ்ந்த மாலை பொழுதில் காடனில் ராஜனும், விக்ரமும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிள்ளைகள் மூவரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


அவர்களை பார்த்துக் கொண்டே மனம் நிறைந்த புன்னகையுடன், டீ ஸ்நாக்ஸ் என்று கவியரசியும், நிலாவும் கொண்டு வந்து அவர்களை அழைக்க,


பிள்ளைகள் விளையாட்டு ஜோரில் வர மறுத்தார்கள்.


பிரக்யா வா என்று நிலா தன் மகளை அழைக்க, 


முடியாது போ என்று அவளுக்கு அழகு காட்டி ஓடிய மகளை முறைத்தவள், 


விக்ரம் அவளை பிடிங்க என்று கணவனை ஏவி விட,


அவன் தான் எப்போதும் மகள் கட்சி ஆச்சே.


விடு மா என்று மகளுக்கு சப்போட் பண்ண,


மனைவி முறைப்பில் எழுந்து பிள்ளையை பிடிக்க சென்றவன் கையில் சிக்காது குட்டி சிரித்து கொண்டே அங்கும் இங்கும் விது, வினியோடு போக்கு காட்டி ஓடிட,


மூவரின் சிரிப்பு சத்தம் மீபெரும் மகிழ்வு ஒலியாக வலுப்பெற்றது.


“நிலா அவளை பிடி” என்று விக்ரம் குரலை தொடர்ந்து,


“நிலாஆ ஆ ஆ“ என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிள்ளையை நிலா பிடித்து கொள்ள, அவளிடம் இருந்து குட்டியை காப்பாற்றி விதுவும், வினியும் அந்த புல் வெளியில் ஓடிட, 


இறுதியில் இரும்பு பாறை போல் திடம் கொண்டவன் மார்பில் மோதி அவன் அணைப்பில் மூவரும் அடங்கி நின்றார்கள்.


வினிஷாவோ விக்ரம் இடையை கிள்ளி கூச்சம் வர செய்திட,


பிள்ளைகள் மூவருடன், புற்கள் மீது விழுந்தவனை சிறை செய்து பிள்ளைகள் மூவரும் கிச்சு கிச்சு மூட்டி கிளுக்கி சிரித்து விளையாடிட, அவனோ சிரித்தபடி தங்கள் அருகே வந்து சேர்ந்த நிலா கையை பிடித்து இழுக்க, அவளும் அவன் மார்பில் விழுந்தாள்.


அவனை சிறை செய்திருந்த தளிர் கரங்கள் இப்போது அவள் மீது பாய்ந்திருக்க, கள்ளமில்லா சிரிப்புகளில் உள்ளங்கள் இணைந்திருக்க,


பெரியவர்கள் இருவரும் தங்கள் ஐந்து பிள்ளைகளின் மகிழ்வை மனநிறைவுடன் பார்த்த படி தேநீரை உறிஞ்சி கொண்டிருந்தார்கள்.


சில நேரம் கனவுகள் நிஜமாகும். பல நேரம் கனவுகளை விட வாழ்க்கை அழகாகும்.


Comments