உன் காதலின் விலை என்ன ? - 1

 




உன் காதலின் விலை என்ன ?


விலை : 1




"கடவுளே!!! எப்படியாவது செலக்ட் ஆகிடனும்" என்று கண்மூடி வீட்டின் அலமாரியில் இடம்பெற்றிருந்த குட்டி விநாயகரிடம் வேண்டுதல்களை வைத்து விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் தாமினி.


தேங்காய் உடைத்து படையல் போடுபவர்களின் வேண்டுதல்களே வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் போது ஒரு பேச்சுக்காக கூட அதை நினைவில் கொண்டு வராதவளின் வேண்டுதல்களை பிள்ளையார் ஏற்பாரா என்ன? எப்போதும் அவளின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவது போல் ஆரம்பித்து கடைசியில் காலை வாரி விடுவதே அவரின் வழக்கம்.  இம்முறையும் அது தொடருமா? காலம் தான் பதில் சொல்லும்.

 

சென்னை புறநகர் பகுதியில் நெருக்கமாக அமைந்த வீடுகள் என்னேரமும் சலசலவென்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் பகுதி அது. தொடர்ந்து ஒருநாள் முழுவதும் மழை பெய்தால் நிச்சயம் லெமூரியாக்கண்டம் தண்ணீரில் மூழ்கியது போல அந்த ஏரியாவும் நீருக்குள் பிரவேசித்து விடும். அங்கு தான் நம்  தாமினி வாடகை வீடு ஒன்றில் தங்கியுள்ளாள்.


வீட்டின் உரிமையாளர் எந்த நேரம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார் என்று தெரியவில்லை மூன்று மாதங்களாக வாடகை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துக் தப்பித்து கொண்டிருக்கிறாள்.



இறைவனே எல்லாம் என நிற்கதியாக நிற்கும் பல குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வளர்த்து வரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். சில நல்ல உள்ளங்களின் தயவில் பட்ட படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்தாள்.


தாமினி, சென்னையில் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் நல்ல வேலையில் தான் இருந்தாள். மாதம் 50 ஆயிரம் சம்பளம். அது அவள் கைக்கு வந்தவுடன் அதை பறித்து செல்ல மோப்பம் பிடித்து வந்து விடுவான் கடன் காரன். இவளுக்கு கடன் கொடுத்த ராக்கெட் ராஜா. அவனிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டிய பணம் இருந்திருந்தால் சொந்தமாக ராக்கெட் ஒன்றை வாங்கி நிலாவிற்கே சென்று விடலாம் அந்த அளவிற்கு மிக மிக நியாயமான மனிதன்.


ஐடி கம்பெனிகளில் அடிக்கடி நடக்கும் வேலையாட்கள் குறைப்பு கொள்கையில் இவளுக்கும் ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எங்கோ கடல் கடந்து ஏசி அறையில் எந்த கவலையும் இன்றி இருக்கும் வெளிநாட்டவனுக்கு இவள் கஷ்டம் தெரியவா போகிறது.


தற்போது வேலையும் பறி போய் இருக்க, ராக்கெட் ராஜாவிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டவில்லை என்றால் அவன் தன் சுயரூபத்தை காட்டி விடுவான். இன்னும் இரண்டு நாளில் வட்டி கட்ட வேண்டும். நிரந்தரமான வேலை கிடைக்கும் வரை கையில் கிடைத்த சிறிய சிறிய வேலைகளில் எல்லாம் சேர்ந்து இரவு பகல் பாராமல் உழைத்தவளால் அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை முழுதாக சேர்க்க முடியவில்லை. மிக மிக சொற்ப பணமே கை வசம் இருந்தது.


வட்டி கட்டியே, பாதி நாட்கள் பசிக்கும் வயிற்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு புரண்டிருக்கிறாள். இப்போதும் அவள் வயிறு 'என்னை நீ கவனிக்கவே இல்லை' என்று சத்தம் எழுப்ப, நேற்று இரவு கூட உண்ணவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

'போகும் இடத்தில் மயங்கி விழுந்து சீக்காழி என்று பட்டம் சூட்டி நிராகரித்து விட்டாள் என் கதி? அய்யய்யோ!' என்று பதறியவள் பக்கத்து வீட்டை நோட்டம் விட, அவ்வபோது அவளின் பசியை தீர்க்கும் மூன்றே வயதான அவளின் அன்னபூரணி வர்ஷா குட்டி தன் அம்மா கொடுத்த இரண்டு இட்லிகளை மெதுவாக கொரித்துக் கொண்டிருந்தது.


மெல்ல அதன் அருகில் சென்றவள் அதன் தட்டிலிருந்து பாதி இட்லியை புட்டு தன் வாயில் திணித்து அவசரமாக முழுங்க, அதற்குள் குழந்தை "அம்மா! அம்மா!" என்று அழ தொடங்கியதும் அதன் அம்மா வருவதற்குள் ஓடிவிட எண்ணியவள் மீதியையும் புட்டு தன் வாயில் திணித்துக் கொண்டே தெரு முனைக்கு ஓடி வந்தாள்.


அங்கேயே நின்று அந்தக் குழந்தையின் அம்மா கற்றுத்தரும் ஆங்கில மொழி அகராதியை கேட்பதற்கு இப்போது நேரம் இல்லையே!


தெருமுனையில் ராக்கெட் ராஜாவின் அல்லக்கை ஒருவன் தள்ளு வண்டி கடைகாரனிடம் தன் சாகசத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொண்டு இருந்தான். "டேய் கூஜா.." ராஜா வோடா கூஜா என நக்கலாக அவனை அழைத்தாள்.


"இன்னா மினி சவுண்ட் பலமா இருக்கு? குளிர் விட்டு போச்சா?" என அவன் மிரட்டும் குரலில் கேட்க, அதற்கெல்லாம் அடங்கி போய் விடுபவள் கிடையாதே, "உங்க நொண்ணன்கிட்ட வாங்கின மொத்த காசையும் இன்னும் ஒரு மாசத்துல இந்த மினி திருப்பி கொடுக்க போறா, வாரி போடுறதுக்கு உன் அண்ணனா பெரிய சூட்கேஸா எடுத்து வச்சிட்டு ரெடியா இருக்க சொல்லு" திமிராக கூற,


"அதெல்லாம் அடுத்த மாசம் பாப்போம். இந்த மாசம் தர வேண்டிய வட்டி காச இன்னும் ரெண்டு நாள்ல தரலைன அண்ணா என்ன பண்ணும்னு தெரியும்ல?" ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கே? என எச்சரிக்கை செய்தான்.


"வட்டி காசு மட்டும் இல்ல அது போட்ட குட்டி காசையும் சேர்த்து கொடுக்கிறேனு போய் சொல்லுடா கூஜா.." என்று அவனிடம் நக்கலாக கூறி விட்டு ஒரே ஓட்டமாக பஸ் ஏறி அம்பத்தூர் வந்து சேர்ந்தாள்.

 


ஓங்கி வளர்ந்திருந்த ஜீ ஆர் குரூப்ஸ் என்று வெள்ளி நிறத்தில் பெயர் பலகையை தாங்கிய கட்டிடத்தின் வாயிலில் நின்று அன்னார்ந்து பார்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.


கீழ்தளத்தில் வரவேற்பாளினியிடம் சென்று சற்று தயக்கத்துடன் "இன்டர்வியூ" என்று மெல்லிய குரலில் கேட்க, அந்த பெண்ணும் இன்முகமாக "டுவல்த் பிளோர் மேம்" என்று அவளை அனுப்பி வைத்தாள்.


எங்கு திரும்பினாலும் சுத்தமாக பளபளவென வெள்ளை நிறத்தில் இருந்தது அந்த கட்டிடம். தரை கூட பளிங்கு போல மின்னியது. "எவ்வளவு பெரிய ஆஃபீஸ்!" என்று வியந்து பார்த்தவள் "எப்படியாவது கையில கால்ல விழுந்தாவது செலக்ட் ஆகிடனும்" என்று தனக்கு தானே கூறிக் கொண்டவள் "உன்ன செலக்ட் பண்ணாம வேற யார செலக்ட் பண்ணுவாங்க.. இது உனக்கு தான் மினி" என தன் திறமையை தானே மெச்சிக் கொண்டு உற்சாகமாக லிப்ட்டில் ஏறி அந்த தளத்திற்கு வந்தாள்.


அங்கு அமர்ந்திருந்த ரிஷப்ஷனிஸ்ட்டிடம் தன் பெயரை கூறி "இன்டர்வியூ அட்டென்ட் பண்ண வந்திருக்கிறேன்" என்று கூற, அந்தப் பெண்ணும் இதழ்களில் நேச புன்னகையுடன் அவளை காத்திருப்பு அறைக்கு அழைத்து சென்றாள்.


அவளுக்கு முன் அங்கு இருந்தவர்களை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் மொத்தமும் வடிந்து தான் போனது.


20 முதல் 25 வயதிற்குள் இருக்கும் பல பெண்கள் இல்லை! இல்லை! பேரழகிகள் அமர்ந்து இருந்தனர். அவர்களை பார்த்தவள் முகம் ஒரு நொடி சுருங்கிவிட, "நாட்டுல முக்கால்வாசி பேருக்கு பண பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும் போலவே?" என்று எண்ணியவள் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.


சிறிது நேரத்தில் வரவேற்பாளினி "மிஸ். சாக்ஷி" என அழைக்க, அந்த பெயருக்கு சொந்தக்காரியும் எழுந்து உள்ளே செல்ல, அவளை ஆ'வென பார்த்து கொண்டு இருந்தாள் தாமினி.


"என்னா... பொண்ணு யா.." என சிம்பு மாடுலேசனில் வெளிப்படையாகவே கூறியவள் 'இந்த மாதிரி பொண்ணுங்கலாம் எங்க இருந்து தான் வாராங்களோ? நான் மட்டும் இன்டர்வியூ பண்ணுற இடத்தில இருந்திருந்தா இந்த பொண்ணு கால்ல விழுந்தாவது செலக்ட் பண்ணி இருப்பேன்' என மைண்ட் வாயிசில் அந்த அழகியைப் புகழ்ந்து கொண்டு இருக்க, அவள் மனமோ 'அவளா நீ? ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ண இப்படி சைட் அடிக்கிற? ஆ.. தூ..' என்று காரி துப்பியது.

அதை அசட்டை செய்து அங்கு வீற்றிருந்த பிற அழகிகள் மீது பார்வையை பதிக்க, 'நாம சரியான அட்ரஸ்க்கு தான் வந்து இருக்கமா? இல்ல மிஸ் வேர்ல்டு கம்பிடிஷன் இன்டர்வியூக்கு ஏதும் வந்துட்டோமா?' என அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது.


அந்த அளவிற்கு அனைவரின் உடையும் ஒப்பணையும் கொஞ்சம் எல்லை மீறியே இருந்தது.


உள்ளே சென்ற சாக்ஷியோ சில வினாடிகளில் கண்களை துடைத்துக் கொண்டே கதவை திறந்து வெளியே வர, அவள் முகமே காட்டி கொடுத்தது அவள் நிராகரிக்க பட்டாள் என்பதை.


"அச்சச்சோ உன்னையே ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா?" என வருந்த 'ஏய் லூசு அவள் செலக்ட் ஆன உனக்கு இங்க வேலை ஏது?' என்று அவள் மனம் அவளுக்கு நியாபக படுத்த, 'அதானே, கிடையாது போ' என்று அவளை விரட்டினாள்.


அடுத்தடுத்து பெண்கள் உற்சாகமாக உள்ளே செல்வதும் சோகமாக வெளியே வருவது என இருக்க, இறுதியாக தாமினியின் முறையும் வந்தது.


"இன்னைக்கு கடவுள் உனக்கு ஹெல்ப் பண்ணியே தீரணும், அவருக்கு வேற வழி இல்லை. நீ தைரியமா போ பேபி" என கடவுளை மிரட்டி "என்னை மட்டும் இவனுங்க செலக்ட் பண்ணல உன்ன வகுந்துடுவேன்" என்று கடவுளுக்கே கொலை மிரட்டல் வேறு விட்டு உள்ளே சென்றாள்.


கண்ணாடி கதவை திறந்து உள்ளே செல்ல, விசாலமான அறையில் பெரிய அலுவலக மேஜைக்கு அந்த புறம் இருவர் அமர்ந்து இருந்தனர். 78 வயதில் ஒருவர். வயது தான் 78, ஆனால் அவர் உள்ளம் இன்றும் இளமையுடன் தான் இருக்கிறது என்பதை அவர் இன்முகமே காட்டிக் கொடுத்தது. கட்டுப்பாடான உணவு முறையும் தினசரி உடற்பயிற்சியும் அவர் உடலையும் நல்ல வலுவாக தான் வைத்திருந்தது.


அவர் அருகில் 17 வயது சிறுவன். ஒரு காதில் காதை ஓட்டி இருக்கும் கடுக்கன், மற்றொரு காதில் ஒல்லியாக சற்று நீளமான கம்மல். கழுத்தில் வரிசையாக இரண்டு மூன்று சங்கிலி, அவன் கையை மேஜை மேல் வைத்திருந்ததால் பத்து விரல்களிலும் வெள்ளி நிறத்தில் விதவிதமாக மோதிரம் போட்டு இருந்தது கூட தெளிவாக தெரிந்தது.

அவர்கள் இருவருக்கும் பின் இருந்த பெரிய கண்ணாடி தடுப்பு மொத்த நகரையும் அழகாக காட்டியது. இருவரையும் அவசரமாக ஆராய்ந்த படி மெல்லிய புன்னகையோடு உள்ளே சென்றாள் தாமினி.

'இந்த வயசுக்கு அப்புறம் இந்த தாத்தாவுக்கு எதுக்கு குழந்தை?' அவரை பார்த்த தாமினியின் எண்ணம் இதுவாகவே இருந்தது.

நாளிதழிலில் வேலை தேடிக் கொண்டிருந்தவளின் கண்ணில் இவர்களின் விளம்பரம் பட்டது. வாடகை தாயக இருந்து தங்களின் குடும்ப வாரிசை பெற்றுக் கொடுக்க ஆரோக்கியமான பெண் தேவை. அதற்கு அவர்கள் வழக்கும் தொகை பத்து லட்ச ரூபாய். இதை பார்த்ததும் "இதுக்கெல்லாம் கூடவா இப்படி வெளிப்படையா விளம்பரம் போடுறாங்க?" என்று யோசித்தாலும் அதில் வழங்க படும் தொகை இப்போது அவள் பிரச்சனைகளை தீர்க்க தேவையானதாக இருக்க அவளும் வந்து விட்டாள்.


'யாருக்காக இருந்தா என்ன? உனக்கு தேவை பணம் தானே!' என்று மனம் நியாபக படுத்த அதன் பிறகு எதையும் ஆராயாமல் அவர்கள் முன் மேஜையில் தன் சுயவிவரம் அடங்கிய கோப்பை வைக்க, பக்கவாட்டில் இருந்து ஒரு கை அதை தன் புறம் திருப்பியது. தன் கோப்பில் பதிந்து இருந்த கை வழியாக விழி உயர்த்தி அவன் முகம் கண்டவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்.


"என் முன்னாடி தலை குனிஞ்சி, என்கிட்ட பிச்சை எடுக்கிற நிலமை உனக்கு ஒருநாள் கண்டிப்பா வரும். அப்போ தெரியும் இந்த ஜார்ஜ் யாருனு" என்று ஆணவத்தின் உச்சத்தில் சீறி பாய்ந்த ஆண்குரலை தொடர்ந்து,


"அப்படி ஒரு நாள் வந்துச்சுனா இந்த தாமினி நைலான் கயித்துல தூக்கு போட்டுபா டா" என்று அவனுக்கு சிறிதும் குறையாத ஆணவத்தில் ஒலித்த தாமினியின் குரலும் ஒரு சேர இப்போது அவள் நினைவில் வந்து அவளை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



Comments