குற்றமென்பது யாதெனில் - 10




 அத்தியாயம் 10



“பிணமா?” என்று சற்று அதிர்ந்தவன், அதை விசாரிக்க ஆய்வாளருடன் செல்ல வேண்டும். ஆனால் ஆய்வாளர் விடுமுறையில் சென்றிருந்ததால், அந்நிலைய பொறுப்பு முழுவதும் அவனையே சார்ந்துள்ளது. 


சம்பவ இடத்திற்கு வந்த கர்ணன் இரு பிணங்களையும் எவ்வாறு கண்டீர்கள்? என தகவல் கொடுத்த நபரிடம் கேட்டான். 


அதற்கு பஞ்சாயத்தில் இருந்து வடிநீர் கால்வாய் வழியாக செல்லும் ஓடைகள் அனைத்தையும் துப்புரவு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், அப்படி செய்து கொண்டிருக்கும் போது, செடி கொடிகளை வெட்டி அகற்றும் போது அதை கண்டதாகவும் கூறினார்கள். 


இரு பிணங்களையும் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தான் கர்ணன். 


மேலும் அந்த இரு சடலங்களும் யாருடையது என்ற விசாரணையில் இறங்கினான். 


ஏற்கனவே இவனது காவல் நிலையத்தில் இருவர் காணாமல் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 


ஒருவேளை அவர்களாக இருக்குமா? என ஐயமும் உள்ளது.


 மேலும் கொலையாளி ஏன் இங்கே வந்து சடலங்களை வைத்தான் என்றும் புரியவில்லை. 


இது ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி. சடலங்களை இங்கு வைத்தால் நிச்சயம் தெரிந்துவிடும். குற்றவாளி நோக்கம் என்ன என்பதே புரியவில்லையே. 


அவன் முட்டாளாக தான் இருக்க வேண்டும். அதனால் தான் இங்கு மறைத்து வைத்துள்ளான் என கர்ணன் நினைத்தான். 


ஏனெனில்  பெரிய கால்வாயில் இருந்து பிரிந்து வயல்களுக்கு செல்லும் சிறு கால்வாய்.


சில கிலோமீட்டர் வரை அந்த கால்வாய் வெளியே தெரிவதில்லை. அந்த கால்வாய் அளவு, ஒரு மனிதனின் உடல் அளவு மட்டுமே இருக்கும். அப்போதைக்கு ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காத காரணத்தினால், செடி கொடிகள் நிறைந்து இருந்த அந்த இடத்தில் சடலத்தை மறைத்து வைக்கலாம் என எண்ணி இருப்பான் என நினைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

 

மருத்துவமனையில் சென்று பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொண்டவன், மருத்துவரிடம் “ஏதேனும் காயங்களோ! தடயங்களோ! ஏதாவது  கிடைத்ததா?” என கேட்டான். 


அதற்கு மருத்துவர் “இரு சடலங்களும் ஒரே நேரத்தில் இறந்தவர்கள் அல்ல. ஒன்று ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆக இருக்கலாம். மற்றொன்று ஏழு மாதங்கள் வரை இருக்கலாம். என கூறினார்.


மேலும் அந்த சடலங்களில் எந்தவித காயமும் இல்லாமல் இருந்தது. அவ்விரு உடல்களும் தோல் மற்றும் எலும்புகளுடன் ஒரு மனித மம்மி போல இருப்பதாக கூறினார்.


கர்ணன் மருத்துவரிடம் “எவ்வாறு உடல் சிதைவில்லாமல் இருக்கிறது? அந்தக் கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் பொழுது தோள்கள் அனைத்தும் இழுத்துச் சென்றிருக்க வேண்டுமே!” எனக் கேட்டான். 


மருத்துவர் அதற்கு “தண்ணீர் அதிகம் வராமல் தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் சிதையாமல் இருந்திருக்கிறது” என்றார் 

         

ஏற்கனவே காரிலிருந்து காணாமல் சென்ற இருவர், சடலமாக மீட்கப்பட்ட இவர்களாக தான் இருக்க முடியும் என சந்தேகத்தின் பேரில் பரிசோதனை நடத்தப்பட்டது. 


அதில் மருத்துவ முடிவு சந்தேகத்திற்கு இடம் இன்றி அவர் இருவரும் தான் என நிரூபிக்கப்பட்டது. 


அதைப் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய உயர் அதிகாரி விடுமுறை முடித்து இரு வாரங்களாகியும் இன்னும் பணிக்கு வரவில்லை. அதனால் முழு பொறுப்பும் இவனுடையது என சென்று கொண்டிருக்கிறது.  


காணாமல் சென்ற இருவர் உடலும் கிடைத்தது. மேலும் ஒருவர் காணாமல் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் அவரும் இறந்திருக்க வாய்ப்புள்ளது என எண்ணினான். 


அப்போது ஒரு விஷயம்  நினைவில் வந்தது பெரும்பாலான சம்பவங்கள் முட்புதர்களுக்கு இடையே நடந்துள்ளன. 


அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து முள் புதர்களிலும் தேடுதல் பணி நடத்தப்பட்டது. 


சில நாட்களாக தேடுதல் பணி நடந்தும், எந்த ஒரு தடையமும் கிடைக்கவில்லை. 


இரண்டு கைவிடப்பட்ட கிணறுகள் மட்டுமே தென்பட்டன. கர்ணனுக்கு சந்தேகமாக இருந்தது. முற்றிலும் மாசடைந்த அந்த கிணற்றில் தேட சொன்னான்.


ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான் கர்ணன். 


கிணற்றில் இறங்கி தேடும்  பணி நடத்தியவர் கூறியது இந்த கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் எதற்காக இதை கைவிட்டார்கள் என எனக்கு இப்போது வரை புரியவில்லை. இக்கிணத்தின் ஆழத்தை சரியாக கூற முடியவில்லை. மரங்கள் கற்கள் கூட உள்ளே விழுந்து கிடக்கின்றன. 


அதனால் உள்ளே சரியாக தெரியவில்லை” என்றான். 


மேலும் சடலங்கள் எதாவது இருந்திருந்தால் நிச்சயம் துர்நாற்றம் வீசியிருக்கும். அவ்வாறு ஏதும் இல்லை. அதனால் இங்கே சடலங்கள் இருக்க சாத்தியக்கூறுகள் குறைவு தான்” என்று கூறினான்.


இது மாதிரி கிணறுகளில் ஆமை போன்ற எந்த உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக இருக்கிறது. 


இப்பகுதியில் கூட தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் இன்னும் உயிரோடு தான் இருந்து கொண்டிருக்கின்றேன். இந்த வகை மீன்களை அழிக்கவே முடியாது போல இருக்கிறது” என்று அவர் கர்ணனிடம் கூறி சென்றனர்.


இரண்டு மூன்று தினங்கள் கழித்து பிரவீன் அவனது தந்தையிடம் தனது மூத்த வழக்கறிஞர் வீட்டில் விருந்து வைத்திருப்பதாகவும், அதில் நான் கலந்து கொள்ள செல்கிறேன் நீங்களும் வருகிறீர்களா? என கேட்டான். 


“ஆம் இருவரும் செல்வோம். எனக்கும் வீட்டில் சாப்பிட்டு வெறுப்பாக உள்ளது. வெளி உணவை நன்றாக ருசிக்க செல்லலாம்” என கூறினான். 


மேலும் “அங்கு அசைவ சமையல் தானே நான் சைவம் சாப்பிடுவதை வெகுவாக வெறுக்கிறேன்” என அவர் கூறிட,


“நிச்சயமாக அசைவம் தான் போடுவார்கள். நாம் இருவரும் சேர்ந்து செல்லலாம். என கூறிக் கொண்டிருக்கும் போதே கர்ணன் அங்கே வந்தான். 


“அசைவ விருந்தா? நானும் வரலாமா?” என கர்ணன் கேட்க, 


“நீ ஆசைப்பட்டு கிடைக்காமல் இருக்குமா? நீ எங்கு சென்றாலும் உனக்கு அசைவ விருந்து தான் கிடைக்கப்போகிறது. நீ ஏன் என்னுடன் வர ஆசைப்படுகிறாய்?” என கேட்டான். 


“நான் வரவில்லை சும்மாதான் கேட்டேன்” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.


பிரவீன் மற்றும் அவனது தந்தை விருந்துக்கு சென்றனர். 


இளங்கோ அசைவ உணவுகளை நன்றாக ருசி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் வந்து “எப்படி இருக்கிறீங்க இளங்கோ?” என நலன் விசாரிக்க,


இந்த கூட்டத்தில் நம்மை யார் கேட்பது என ஐயத்துடன் இளங்கோ திரும்பி பார்த்தார்.


அவரது முன்னாள் நண்பன். 


“சுரேஷ்… நீ எப்படி இங்க? நல்லா இருக்கியா?” என இருவரும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். 


அப்போது பிரவீன் குறுக்கிட்டு “எனது அப்பாவ உங்களுக்கு தெரியுமா?” என கேட்டான். 


இளங்கோவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தது வேற யாரும் இல்ல, பிரவீனின் மூத்த வழக்கறிஞர் தான். 

 

நான் வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் அரசு வேலையில் தான் இருந்தேன். அப்போதுதான் உனது தந்தையை எனக்கு தெரியும். எங்களது பயிற்சி காலத்திலிருந்து ஓராண்டுகள் வரை ஒன்றாகத்தான் இருந்தோம். அப்போது உனது தந்தை மிகவும் கோபக்காரனாகவும், எதற்கெடுத்தாலும் சண்டையிடும் குணம் உள்ளவனாகவும் இருந்தார். 


இப்போதும் அப்படித்தான் உள்ளாயா இளங்கோ?” என கேட்டார் சுரேஷ். 


பிரவீனுக்கு சற்று அதிர்ச்சி. பிரவீன் சுரேஷிடம், “பிறகு ஏன் அரசு வேலையை விட்டீர்கள்?” என கேட்டான். 


“அரசு வேலை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமாறு தோன்றியது. இது நமது சுதந்திர வேலை இங்கு வெற்றி, தோல்வி நம்மளுடையது. மேலும் நாங்கள் இருந்த வேலை சில சமயங்களில் அதிக அபாயங்கள் கொண்டது. அதனால் தான் நான் வெளியே வந்து விட்டேன். 


உனது தந்தை மிகவும் கடினமாக உழைப்பார். மேலும் எந்த அபாயம் என்றாலும் கண்டுகொள்ளாமல் பிறருக்கு உதவி செய்வார். எனக்கு தெரிந்தவரை இரு முறை உனது தந்தை உயிரை பணயம் வைத்துள்ளார். அதற்கான விருதுகளும் வாங்கியுள்ளான். 


இப்போது கோபங்கள் அனைத்தும் விட்டு விட்டாயா? இல்லை இப்போதும் அப்படித்தான் இருக்கிறாயா?” என கிண்டலாக கேட்டார். 


இளங்கோ அதற்கு “அன்று எப்படியோ அது போல்தான் இன்றும். பார்த்தாயா இலவச சாப்பாடு என்றவுடன் உனது வீட்டிற்கு வந்து விட்டேன்” என்று நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தனர். 


விருந்து முடித்து வீட்டிற்கு வந்தவுடன் பிரவீன் அவனது தந்தையை சற்று வினோதமாக பார்த்தான். 


இளங்கோ ‘“என்ன பிரவீன் என்ன வேண்டும்?” என கேட்டார். 


“எதுவும் இல்லை அப்பா” என்று சொல்லி தூங்க சென்று விட்டான்.

 

விருந்துக்கு சென்று வந்து ஒரு வாரங்களுக்கு மேலாகியும் பிரவீன் மனதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. அதை தீர்க்க அன்னையை நாடி சென்றான். 


அவனது தாய் சமையல் அறையில் நின்றிருந்தார்.


உள்ளே வந்து நின்ற மகனிடம், “என்ன பிரவீன் வேண்டுமென?” கேட்க,


“அப்பா பற்றி ஒன்று கேட்க வேண்டும்” என்றான். 


அப்போது உள்ளே வந்த கர்ணன் வெளியில் நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான். 


பிரவீன் “நாங்கள் விருந்திற்கு சென்ற போது எனது மூத்த வழக்கறிஞர் அப்பாவை பற்றி கூறினார். ஆனால் இப்போது உள்ள அப்பாவுக்கும், அவர் கூறியதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்பா மிகவும் கோபக்காரர் என்றும், வேலை செய்யும் இடத்தில் அதிக அளவு ஆபத்துகளை சந்திப்பவர் என்றும் கூறினார். 


ஆனால் நான் பார்த்தவரை எனது தந்தை கோபம் என்றால் என்ன என்று கேட்பவர். தீயணைப்பு வாகனத்தை இயக்கும் பொழுதோ, ஏதேனும் சிறு பிரச்சனைகளில் கூட ஆபத்து வரும் என வேலையை விட்டு ஒதுங்கி வந்தவர். அதனால் தான் எனது மூத்த வழக்கறிஞர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை கிண்டலாக கூறினாரா? என எண்ணிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் உங்களிடம் கேட்டேன்” என்றான் பிரவீன் 

            

லட்சுமி அதற்கு “எங்களுக்கு திருமணம் முடிந்து கர்ணன் பிறந்து இரண்டு ஆண்டுகள் வரை உனது தந்தை அவ்வாறு தான் இருந்தார். அதன் பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார். ஏன் என ஒருமுறை நானும் கேட்டுள்ளேன். அதற்கு அவர் கிண்டலாக ஒருவேளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நீ குழந்தைகளுடன் கஷ்டப்படுவாய். 


மேலும் உனக்கு வெளி உலகம் சரியாக தெரியாது. அதனால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளையும், நம் இரு குழந்தைகளும் வேலைக்கு செல்லும் முன் நான் எந்த விதத்திலும் எனது உயிரை இழக்கவோ! ஆபத்தில் மாட்டிக் கொள்ளவோ! விரும்பவில்லை” என கூறினார்.


ஆனால் சில காலங்கள் சென்ற பிறகுதான் எனக்கும் தோன்றியது. அவர் கேலியாக சொல்லவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்கும் எண்ணத்தில் தான் கூறி இருந்திருக்கிறார். 


மேலும் நோய்வாய்ப்பட்டதை தன்னுடன் இருப்பவர்களுக்கு தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டார். இப்போது நீங்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு தான் அவரால் நிம்மதியாக இருக்க முடிகிறது என நினைக்கிறேன். இப்போது தோன்றும் போது தோட்டத்தை பராமரிக்க செல்கிறார். நீங்கள் இருவரும் நன்றாக இருந்தால் எங்களுக்கு அதுவே போதுமானது” என கூறினாள். 


இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரவீன் மற்றும் கர்ணன் இப்பொழுது தான் தங்கள் தந்தையை எண்ணி பெருமிதம் கொண்டனர். 


இருப்பினும் கர்ணன்  அதை வெளிகாட்டவே இல்லை. 

           

ஒரு சில நாட்களில் மீண்டும் ஒரு வழக்கு வந்தது. 


ரேகாவிற்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டவாறு காவல் நிலையத்திற்கு வந்தால். 


தனது கணவர் மற்றும் தனது தந்தை என இருவரையுமே காணவில்லை. இருவரையும் கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டாள். 


“இருவரையும் எப்போதிலிருந்து காணவில்லை?” என காவலர் ஒருவர் விசாரித்துக் கொண்டிருந்தார்.


ரேகா, “எனது கணவரை நான்கு நாட்களாக காணவில்லை. அவரைத் தேடிச் சென்ற எனது தந்தையை நேற்றிலிருந்து காணவில்லை” என்று கூறினாள்.

          

கர்ணனுக்கு இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கிறது என நன்றாகவே தெரிந்தது.


அதனால் மேலும் விவரங்களை சேகரிக்க தொடங்கினான். 


“உங்களது திருமண காலத்திற்கு முன்பாக இருந்து உங்களது கணவருக்கு இருந்த பிரச்சனைகள் மற்றும் உங்களது தந்தைக்கு இருந்த அனைத்து பிரச்சினைகளையும் உங்களுக்கு தெரிந்தவரை கூறுங்கள்” என கேட்டான். 


“எனது தந்தை தொழிலதிபர். தொழில்முறை எதிரிகள் மட்டுமே உள்ளனர். பழிவாங்கும் எண்ணத்தில் கடத்தப்பட வாய்ப்பில்லை. 


மேலும் எனது கணவர் எனக்கு தெரிந்தவரை திருமணத்திற்கு பின் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை.


அவர்களது நண்பருடன் சேர்ந்து வெளியே செல்வது எனது தந்தைக்கு பிடிக்காது என்பதால் அவர் நண்பருடன் பேசுவதை விட்டு விட்டார்.” என்று ரேகா சொல்லவும்


கர்ணன், “எதற்காக உங்கள் கணவர் அவரது நண்பருடன் பேசுவது உங்கள் தந்தைக்கு பிடிக்கவில்லை? என கேட்டான். 

    

அதற்கு ரேகா, “எங்களுக்கு திருமணமான ஒரு சில நாட்களில் இவர் நண்பர்களுடன் சேர்ந்து மதுபான விருந்தளித்தார். விருந்து முடிந்து திரும்பிய வழியில் சாலை விபத்தில் மாட்டிக் கொண்டார். 


அந்த விபத்தில் இருந்து எனது கணவரை காப்பாற்ற எனது தந்தை அதிகளவு பணத்தை செலவழித்தார். 


மேலும் விபத்தில் சிக்கிக்கொண்ட அவரது நண்பனது உறவினர்கள், விபத்திற்கு காரணம் எனது கணவர் தான் என பிரச்சனை செய்தார்கள். அதனால் தான் எனது கணவரை அவரது நண்பர்களை பார்க்கச் கூடாது என என் தந்தை எச்சரிக்கை செய்தார். 


மேலும் அவருக்கு மது அருந்தும் எண்ணம் வரும் போதெல்லாம் நானும் அவரும் வீட்டில் அல்லது மது விடுதிக்கு சென்று விட்டு வருவோம். 


அப்படி வரும் பொழுது ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுவனின் மீது வாகனம் இடித்தது. அச்சிறுவனுக்கு பெரிய அளவு காயம் ஏற்படவில்லை. இருப்பினும் அதை சரிகட்ட அக்குடும்பத்திற்கு அதிக அளவு பணம் கொடுக்க வேண்டியதாயிற்று. அத்துடன் பிரச்சனையும் முடிவுற்றது. வேறு ஏதும் பிரச்சினைகள் எங்களுக்கு இல்லை” என கூறினாள்.

         

கர்ணன் அதற்கு “விரைவில் உங்களது கணவரையும், தந்தையையும் மீட்டு தருவேன். அவர்களுக்கு எதுவும் ஆகாது. நீங்கள் நிம்மதியாக வீட்டுக்கு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என ஆறுதலாக கூறி அனுப்பினான்.


அவர்கள் இருவரையும் தேடும் பணியை தொடங்கினான். 


அப்பொழுது அவர்களின் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


அவைகள் இரண்டும் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தன. அவைகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை பார்க்கும் போதே தெரிந்தது, கார் மற்றும் இரு சக்கர வாகனம் இரண்டையும் அதன் உரிமையாளர்கள் தான் விட்டுச் சென்று இருக்க வேண்டும் என்று. ஏனென்றால் இரு வாகனங்களும் சாவியால் பூட்டப்பட்டு இருந்தன. இருப்பினும் தடயங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என பரிசோதிக்கப்பட்டது.


அதில் கைரேகையோ சந்தேகத்துக்கிடமாகவோ எதுவும் இல்லை. மருமகனின் இருசக்கர வாகனம் இருப்பதைக் கண்டு மாமாவும் தனது காரை அங்கே நிறுத்தி இருக்கிறார் என்பது போல் தான் தோன்றுகிறது. 


மேலும் அவர் ஏன் இங்கு வந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு எங்கு சென்றார்? புரியவில்லையே எனக் குழம்பிக் கொண்டிருந்தான் கர்ணன். 


இப்பகுதியிலும் சற்று தொலைவில் முள் புதர்கள் இருந்தன. அதனால் கர்ணன் சந்தேகப்பட்டு அப்புதர்களில் தேட ஆரம்பித்தான். 


ஆனால் எந்த வித தடயங்களும் கிடைக்கவில்லை. 


முட்புதர்களின் அருகில் தான் கைவிடப்பட்ட  கிணறு உள்ளது. ஒருவேளை ஏதேனும் சடலம் கிணற்றில் இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று பார்த்தான். 


அங்கு எந்த சடலத்தின் துர்நாற்றமும் வீசவில்லை. ஒருவேளை கொலை செய்யப்பட்டிருந்தால் அவர்களது சடலம் நீரில் மிதந்து கொண்டிருக்கும். அல்லது துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும்.


பெரும்பாலும் இந்த கிணற்றின் அருகில் யாரும் வருவதில்லை. ஆனால் சமீபத்தில் யாரோ அவ்வழியாக வந்து சென்றிருப்பதாக கர்ணனுக்கு தோன்றியது. 


மேலும் ஒரு கிணறு அதன் அருகாமையில் இருக்கிறது. அங்கு சென்று பார்த்த பொழுது அந்த கைவிடப்பட்ட கிணற்றில் சில சிறுவர்கள் தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்களுக்கு தூண்டில் மீன்கள் போட்டுக் கொண்டிருந்தனர்.


அதைப் பார்த்த கர்ணன் அச்சிறுவர்களை இது ஆபத்தான பகுதி, நீங்கள் வரக்கூடாது என அங்கிருந்து சிறுவர்களை விரட்டினான். 


கர்ணனுக்கு அப்போது புரிந்தது இந்த சிறுவர்கள் தான் அந்த கிணற்றிலும் மீன் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். 


சிறுவர்களிடம் “இது தடை செய்யப்பட்ட மீன்கள். இதை தொட்டால் உங்களுக்கு தோல் நோய் வரும். அதனால் இவ்வகை மீன்களை நீங்கள் பிடிக்க முயற்சி செய்யாதீர்கள்” என அறிவுரைகள் கூறி அவ்விடம் விட்டு புறப்பட்டான் கர்ணன். 


சாலையின் மேல் பகுதியில் வந்து தனது வாகனத்தை எடுக்கும் பொழுது அவ்வழியாக அவன் தந்தை மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 


கர்ணனை அங்கு பார்த்தவர் வாகனத்தை நிறுத்தி, “இங்க என்ன பண்ற?” என கேட்டார்.


“வழக்கு ஒன்றை விசாரிக்க வந்தேன்” என கூறினான்.


அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் திருமணத்திற்கு உள்ளது. அதை வைத்துக்கொண்டு இந்த மாதிரி இடத்துக்கு வருவது சரியல்ல” என கூறி அவ்விடம் விட்டு செல்லும் பொழுது,


“எங்க போறீங்க?” என கர்ணன் கேட்டான். 


“தெரு நாய்க்கு உணவளித்து விட்டு வருகிறேன்” என கூறி அவ்விடம் விட்டு சென்றார் இளங்கோ.

     


Comments

Popular posts from this blog

அதிரல் தாங்கும் பாதிரி எக்ஸட்ரா