விலை : 25

 




விலை : 25


உலகில் உள்ள பெண்களே..
உரைப்பேன் ஒரு பொன்மொழி..
காதல் ஒரு கனவு மாளிகை..
எதுவும் அங்கு மாயம் தான்..
எல்லாம் வர்ணஜாலம் தான்..
நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!!

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்ளடி என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!


மறுநாள் காலையே ஸ்ரீயின் ஊருக்கு கிளம்பி விட்டாள் தாமினி. அவளுடன் அவள் தோழி மீராவும் சென்றிருந்தாள். தாமினி இருக்கும் மன நிலையில் அவளை தனியே விட மீராவிற்கும் மனமில்லை. அன்று ஸ்ரீ அழைத்து சென்ற வீட்டின் முன் இருவரும் நின்றிருக்க, அந்த வீட்டின் கதவிலோ பெரிய துருப்பிடித்த இரும்பு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்து தாமினி தான் அதிர்ச்சியானால். மீராவோ, "இப்போவது புரிஞ்சுதா.. கன்பார்ம் அவன் உன்னை ஏமாத்திட்டான்" என்று கூற, அப்போதும் தான் ஏமாற்றபட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது, "இல்லை.. அவன் அம்மா வயலுக்கு போய் இருப்பாங்க.. கண்டிப்பா அவங்க அங்க தான் இருப்பாங்க" என்று ஏதோ குருட்டு நம்பிக்கையில் அன்று அவர்கள் அழைத்து சென்ற வயலை நோக்கி இவள் ஓட, மீராவோ தலையில் அடித்து கொண்டு தாமினி பின்னல் ஓடினாள்.


அந்த வயலில் சிலர் அறுவடைக்கான வேலையில் ஈடுபட்டிருக்க, அவர்களுக்கு நடுவில் ஸ்ரீயின் அம்மாவை தேடியவள் கண்களில் இருந்து அவள் அறியாமல் கண்ணீர் சுரந்து நின்றது.


"என்ன இங்க இருக்காங்களா?" என்று மீரா தன் தோழி இன்னும் முட்டாள் தனமாக அவர்களை நம்பிக் கொண்டிருப்பதை எண்ணி கோபமாக கேட்க, அவளோ தலை கவிழ்ந்து இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள். அவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் எப்போதோ கன்னத்தை கடந்து அருவியாக பாய ஆரம்பித்து விட்டது.


"இப்போவாது முழிச்சுக்கோ.. அழாத மினி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்" என்று ஆறுதலாக கூறினாள் மீரா.


சட்டென்று கண்ணீரை துடைத்து கொண்ட மினி, அந்த வயலில் அன்று ஸ்ரீ வீட்டின் முன் வீதியில் பார்த்த நபரை பார்க்க, ஸ்ரீ மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவளோ, "அவங்க அம்மா எங்கேயாவது போய் இருக்கலாம் இல்லையா?" என்று அவரிடம் ஸ்ரீயையும் அவன் அம்மாவையும் பற்றி விசாரிக்க,


அவரோ "அந்த பையன் சினிமா ஷூட்டிங் எடுக்கணும்னு அந்த வீடும் இந்த வயலும் வேணும்னு கேட்டான். அந்த வீட்டோட உரிமையாளர் வெளிநாட்டுல தன் பிள்ளைங்கலோட போய் தங்கிட்டாரு மா.. இங்க வராதே இல்லை. அவர்கிட்ட பேசி தான் சாவி வாங்குனதா சொன்னான். இது என்னோட வயல். ஒரு நாள் சினிமா எடுக்க வேணும்னு கேட்டு அதுக்கு பணமும் கொடுத்தான். உன்ன நான் அன்னைக்கு பார்த்தேனே, நீ தான் அந்த படத்துல நடிக்கிற ஹீரோயினாமா?" என்று கேட்க, இவளுக்கோ தலையெல்லம் சுற்றுவது போல் இருந்தது.


அங்கே வயல் வரப்பிலே அவள் தோய்ந்து அமர்ந்து விட்டாள். கதறி அழவில்லை என்றாலும் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் பாய்ந்து அவள் ஆடையை நனைத்து கொண்டிருந்தது.


எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள். அனைத்தும் ஒரு நொடியில் பொய்த்து விட்டது அல்லவா? மீரா தான் "தாமினி எல்லாரும் பார்க்கிறாங்க முதல்ல இங்க இருந்து போகலாம்" என்று அவளை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.


"சரி இப்போ என்ன பண்றதா ஐடியா? போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாமா? அவன் ஃபோட்டோ உன்கிட்ட இருக்கு தானே" என்று கேட்க, அவனுடன் பழகிய இந்த நான்கு மாதங்களில் அவனுடன் ஒரு ஃபோட்டோ கூட எடுத்தது இல்லை. அதற்கு அவனும் வாய்ப்பு கொடுத்தது இல்லை. தன் முட்டாள் தனத்தை எண்ணி தன் மீதே கோபம் வந்தது.


அடுத்து அவனை பற்றி யோசிக்க நேரம் கொடுக்காமல் மாலை வருவதாக கூறிய ராக்கெட் ராஜா மதியமே வந்து நின்றான் "வட்டி காசு ரெடியா?" என்று கேட்டு. அவனை பார்த்து அஞ்சியவளோ தன் முந்தைய மாத உழைப்பாக வங்கி கணக்கில் அன்று காலை தான் விழுந்த பணத்தை மொத்தமாக எடுத்து அவனிடம் கொடுக்க, அவனும் "இதே போல அசல் மொத்தமா கொடுக்கிற வரைக்கும் கரைக்ட்டா வட்டி கொடுக்கணும். இல்லை.. என்ன விட மோசமானவனை நீ பார்த்து இருக்க மாட்டா" என்று மிரட்டி சென்றான்.


எந்த துணையும் பலமும் இல்லாதவள் அவனை கண்டு அஞ்சி தான் போனாள். அவளே ஸ்ரீயை தேடும் முயற்சியில் இறங்கினாள். என்னவென்று காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது. அவனை பற்றி எதுவும் தெரியாமல், அவன் கூறிய அனைத்தும் பொய்யாக இருக்கும் பட்சத்தில். அவன் உதவி இயக்குனராக வேலை பார்த்த இயக்குனர் கூட போலியானவன் தான் என்பது இவள் அவனை தேட ஆரம்பித்து பல நாட்கள் கழித்து தான் கண்டுபிடித்தாள்.


மீண்டும் மீண்டும் "எவ்வளவு முட்டாளாக இருந்து உள்ளேன்" என்று தன்னை தானே கடிந்து கொண்டு மட்டும் என்ன பிரயோஜனம். கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் ஆகிவிட்டது அவள் கதை.


ஸ்ரீயை தேட ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இது வரை அவனை பற்றி ஒரு துரும்பும் கண்டு பிடிக்க முடியவில்லை அவளால்.


அன்று காலையில் எப்போதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்தவளிடம் வந்த மீரா, "மினி.. என் கூட இனி இந்த வீட்ல நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ற, நதியாவும் ஸ்வேதாவும் தங்க போறாங்க நீ காலி பண்ணிக்கோ" என்று உத்தரவாக கூற, முதலில் எதுவும் புரியாமல் அவளை பார்த்து கொண்டு நின்றாள் தாமினி. மீராவோ "எனக்கும் ஃபேமிலி இருக்கு. என்னோட சலரி நம்பி தான் அவங்களும் இருக்காங்க. என்னால உனக்கும் சேர்த்து சாப்படு போட்டு மொத்த வாடகையும் நானே கொடுக்க முடியாது. நீ காலி பண்ணிக்கோ" என்று சற்றே கோபமாக கூறினாள். இவள் முட்டாள் தனமானக ஏமாந்து நிற்பதற்கு தானும் ஏன் கஷ்ட பட வேண்டும் என்று எண்ணிவிட்டாள். அவளின் தீடீர் முடிவு தாமினிக்கு தான் பேரதிற்சியாக இருந்தது.


இப்படி திடீரென்று போக சொன்னால் அவளும் எங்கே போவாள். அவளுக்கென்று இந்த உலகில் ஒரு உறவும் இல்லையே.


மீரா நிலையில் இருந்து யோசித்து பார்த்தால் அவள் சொல்வது ஒன்றும் தவறில்லையே. ஆனால் இப்படி உடனடியாக போய் விடு என்று சொல்வதை தான் தாமினியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


"சரி நான் போறேன். ஒரு ஒன் வீக் டைம் கொடு" என்று கேட்க, "இல்லை மினி அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கே இங்க ஷிஃப்ட் ஆகுறாங்க.. அவங்களுக்கு நீ இங்க இருக்கிறது பிடிக்கலை. போய்யிடு" என்று மீரா வெளிப்படையாக அவளை துரத்த, தன்மானம் இழந்து அவளிடம் கெஞ்சி இங்கே இரண்டு நாட்கள் கூட நீடிக்க வேண்டாம் என்று ஏதோ ஒரு ஆதங்கத்தில் தன் உடமைகளை எல்லாம் எடுத்து கொண்டு சென்று விட்டாள்.


காலை அலுவலகத்திற்கு வந்தவள் மாலை வரை வேலையில் மூழ்கி விட, மாலை வேலை முடிந்து எங்கு செல்வது என தெரியாமல் பார்க்கிங் ஏரியாவில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டிருந்தாள். வாழ்வே சூனியமான உணர்வு. எங்கு சென்று யாரிடம் உதவி கேட்பது. அவள் வளர்ந்த ஆசிரமத்திற்கு செல்லலாம் தான். ஆனால் தான் வளமாக இருந்த நாட்களில் அவர்களை பற்றி ஒரு நாள் கூட நினைத்தது இல்லையே. அப்படி நினைத்து இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் தன்னால் இயன்ற சிறு தொகையேனும் அளித்து உதவி இருந்தால் இப்போது அவர்களை நாடி சென்றிருக்கலாம். அவர்களும் அன்பு கரம் நீட்டி இருப்பார்கள் தான். ஆனால் எந்த உதவியும் செய்யாமல் தனக்கு கஷ்டம் என்று வரும் போது மட்டும் அவர்களிடம் சென்று தஞ்சம் கொள்ள தர்ம சங்கடமாக இருக்க, அங்கு செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை.


எத்தனை நாளிகை அங்கே இருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. தன் அருகில் கேட்ட கார்ன் சவுண்டில் தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவள் தன் எதிரில் பார்க்க, கம்பனி கேப் ஓட்டும் ஒருவர் அவளிடம் "என்ன பாப்பா.. எல்லாரும் போயாச்சு நீ இன்னும் போகலையா? எந்த ஏரியா சொல்லு நான் கொண்டு விடுறேன். எங்க போகணும் பாப்பா" என்று அக்கறையாக கேட்க, போகும் இடம் தெரிந்தால் எப்போதோ போய் இருக்கப்பாளே.. அது தெரியாமல் தானே இங்கே அமர்ந்து ஊமையாக கண்ணீர் வடிக்கிறாள்.


அவர் எங்கு போக வேண்டும் என்று கேட்டதும் மனதில் தேக்கி வைத்து இருந்த கவலைகள் உடைப்பெடுக்க கண்ணீராக வெளியேறி விட்டது. அதை பார்த்த அந்த டிரைவர் "என்னாச்சு பாப்பா?" என்று பதறி வண்டியில் இருந்து இறங்கி அவளிடம் வர, அவளோ தன் நிலையை அவரிடம் விளக்க, அவர் "நீ கவலை படாதே பாப்பா.. எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு காலியா தான் இருக்கு. உனக்கு ஓகேனா ஓனர் கிட்ட பேசி வீடு வாங்கி கொடுக்கிறேன்" என்று பரிவாக கூறி அழைத்து சென்றார்.


மூவாயிரம் ரூபாய் வாடகையில் அந்த வீட்டையும் முடித்து கொடுத்தார். தாமினியும் தான் ஆசையாக வாங்கிய தங்க தோடை விற்று அட்வான்ஸ் கொடுத்து அந்த வீட்டில் குடி போனாள்.


"இந்த தாலியும் போலியா?" என்று அந்த நகை கடையில் அதை பரிசோதிக்க, அந்த நகை வியாபாரியோ அது சுத்த தங்கம் என்று கூற, மேலும் குழம்பி போனாள் தாமினி. ஏமாற்ற நினைத்தவன் இதை மட்டும் ஏன் போலியாக கொடுக்கவில்லை என்று யோசித்து, உண்மையில் அவன் கெட்டவன் தானா? இல்லை அவன் ஏதேனும் பிரச்சனையில் மாட்டி உள்ளானா? இப்போது நடப்பது தான் உண்மையா? எது உண்மை என்று தெரியாமல் யோசித்து யோசித்து குழப்பம் அதிகரித்தது தான் மிச்சம். ஏனோ எவ்வளவு கஷ்டத்திலும் தாலியை மட்டும் விற்க தோன்றவில்லை. அது நிச்சயம் அவன் மீது உள்ள நம்பிக்கையில் இல்லை. தாலி மீது அவள் கொண்ட மதிப்பால் மட்டுமே.


சொந்தமென்று யாரும் இல்லை என்றாலும் எப்போதும் கூட்டமாக வாழ்ந்து பழகியவள் இப்போது முழுவதுமாக தனித்து விடபட்டாள். ஆசிரமத்தை விட்டு வெளியே வரும் போது இனி தான் சுதந்திர பறவை என்று உற்சாக கூச்சலிட்ட மனம் இப்போது தனிமையில் ஆறுதல் சொல்லி கன்னத்தை நனைக்கும் கண்ணீரை துடைக்க கூட ஆளின்றி ஓலம் இட்டது.


தட்டி கேட்க ஆளின்று தனித்து நிற்பதும் மரண வேதனையாக இருக்க, கதவில் சாய்ந்து தரையில் விழுந்தவள் வெடித்து அழுது விட்டாள். ஆறுதல் சொல்லவும், "நீ ஆழதே நானிருக்கிறேன்" என்று தேற்றவும் யாரும் இல்லாத அனாதை என்ற உணர்வு முதன் முதலாக இதயத்தை ஆயிரம் ஊசியால் குத்தியது. அழுது அழுதே, சக்தி எல்லாம் வடிந்து அவளாகவே துவண்டு தூங்கி போனாள்.


அதன் பிறகு சம்பள பணம் மொத்தமும் ராக்கெட் ராஜாவின் வாய்க்கு இரையாக, தான் உயிர் வாழ வேண்டுமே என்று பெட்ரோல் பங்க், காஃபி ஷாப் என பல இடங்களில் பகுதி நேர வேலையில் சேர்ந்து தூக்கத்தை தொலைத்து துக்கத்தை மறக்க முயற்சி செய்தாள்.


"முதல் மாச சம்பளம் கையில் வர்றது முன்னாடி காதல் வந்துருச்சு, நாலே மாசத்துல வாழ்க்கையை நல்லா புரிய வச்சுட்டு போயிடுச்சு" என்று விரக்தியாக தன் கதையை கூறி முடித்தாள்.


அவள் கஷ்டங்களை அவள் சொல்லும் போது 'தான் ஏன் அந்த நேரத்தில் அவளுடன் இல்லாமல் போனேன். தன்னவள் யாரும் இன்றி தவித்த போது தன்னை ஏன் அந்த கடவுள் அவள் முன் கொண்டு சேர்க்கவில்லை?' என்று அவளுக்காக வருந்திவன் அணைப்பு அவள் மீது இறுகி 'உனை எந்த தீங்கும் நெருங்காது பாதுகாப்பேன்' என்று உணர்த்தி அவள் பின் தலையில் அழுந்த முத்தம் இட்டான். ஆனால் அவள் இருந்த மனநிலையில் அதை எதுவும் உணரவில்லை.


இப்போது அவன் கையணைவில் இருக்கும் இந்த சிறை வாசம் எப்போதும் வேண்டும் என்று மனம் ஏங்க, அவன் பக்கமாக சற்று திரும்பி அவனை அணைத்து கொண்டாள்.


"சில பறவைகளுக்கு, சுதந்திரமா வானத்துல பறக்கிறது விட, கூண்டுகுள்ள இருக்கிறது தான் எப்போதும் பாதுகாப்பு. ஆனா அதை பாதுகாக்க எந்த கூண்டும் கிடைக்கிறது இல்லை" என்று அவன் நெஞ்சில் தலை சாய்ந்து முகத்தை அழுத்தி அவனுள் ஒன்றி இங்கே இடம் கிடைக்குமா? என்னும் விதத்தில் அவள் கூற, அவன் அணைப்பும் இன்னும் அதிகமானது. முடிந்தால் அவளை தான் உயிருள் பூட்டி பாதுகாத்து கொள்ள அவனுக்கும் ஆசை தான்.


ஒரு சில நிமிடங்கள் இருவருள்ளும் மெளனம் நிலவ, தாமினி சிந்தனையோ அவனிடம் கூறாமல் விட்ட, மீராவின் வார்த்தைகளில் உழன்று கொண்டிருந்தது.


தாமினி வீட்டை விட்டு வெளியேறும் சமயம், "மினி..." என்று மீரா அழைக்க, ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பவள், இப்போது மீராவின் திடீர் துரத்துதலில் இன்னும் காய பட்டு வெறுப்பாகி போக, அந்த எரிச்சலையும் கோபத்தையும் மொத்தமாக அவள் மீது காட்டி விட்டாள் வார்த்தைகளில். "என்ன? அதான் போக சொல்லிட்டல்ல இன்னும் என்ன?" என்று எரிந்து விழ, மீராவிற்கும் கோபம் வந்துவிட்டது. 'எதுவும் இல்லாமலேயே அவளுக்கு இவ்வளவு திமிரா?' என்று கறுவிக் கொண்டவள்,


"இனியாவது கொஞ்சம் புத்தியோட பொழைக்க பாரு. முதல்ல அந்த தாலியை தூக்கி தூர போடு. அதுவும் போலியா தான் இருக்கும். அதையே பார்த்து வாழ்க்கையை வீணடிக்காத" பொறுமையாக அவளுக்கு சில அறிவுரைகள் அளிக்கவே அழைத்தாள். ஆனால் தாமினியின் பேச்சால் கோபமுற்று அவளும் வார்த்தைகளில் அனலை அள்ளி வீசலானாள்.


"இந்த உலகத்துல ஒரு பொண்ணு கிட்ட மத்தவங்க எதிர் பார்க்கிறது ரெண்டே விசயம் தான். பணத்துக்காக அலையுற கூட்டம், உடம்புக்காக அலையிற கூட்டம். இவங்ககிட்ட இருந்து தப்புறது கஷ்டம் தான். உன்ன யூஸ் பண்ண நினைக்கிறவங்களை முடிஞ்ச அளவுக்கு நீ யூஸ் பண்ணிக்கோ.  தாலியை கையில வச்சுட்டு அந்த வீணா போனவன் திரும்ப வருவான் உன்னை கல்யாணம் பண்ணிப்பானு இன்னும் முட்டாள் தனமா அவனை நம்பிட்டு இருக்காத. அவனவன் லட்ச கணக்குல வரதட்சணை வாங்கி தான் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுறான். அப்படி இருக்கும் போது எதுவும் இல்லாத உன்ன யார் கல்யாணம் பண்ணிப்பாங்க? எவனாவது வச்சிகிட்டா தான் உண்டு. நல்லா வசதியானவனா பார்த்து புடிச்சிக்கோ. மறுபடியும் எவன் கிட்டயாவது போய் ஏமாந்து நிக்காத" என்று உதாசினமாக வார்த்தைகளால் அவளை வதைத்து இருந்தாள்.


அதை எண்ணியவள் விழிகள் இப்போதும் நீரை சுரக்க கஷ்டபட்டு அதை அடக்கி கொண்டாள். 'அவன் பணத்திற்காக பழகினான். இவன்? நினைக்கவே உடம்பெல்லாம் கூசியது. இல்லை அவன் மாதிரி இவன் கிடையாது. என் ஜார்ஜ் நல்லவன் தான். என்னை உண்மையா காதலிக்கிறான்' என்று ஜார்ஜ் மீது கொண்ட காதலால் அவனை கெட்டவனாக சித்தரிக்கும் மூளைக்கு காதல் மனம் பதில் அளித்து கொண்டிருந்தது


'அவ்வளவு நல்லவனா இருந்தா கல்யாணம் பண்ணாம குழந்தை மட்டும் ஏன் வேணும்னு கேட்டான். அதுவும் பிஸிகல் ரிலேசன்ல. இவன் ஏமாத்தல, வெளிப்படையா அவன் நோக்கத்தை சொல்லிட்டான். நீ தான் முட்டாளா காதல் அது இதுனு வீண் ஆசைகளை வளர்த்துட்டு மறுபடியும் ஏமாற போற' என்று குற்றம் சாட்டியது.


இல்லை என்று அதனிடம் மறுத்து வாதாட தோன்றவில்லை. அது சொல்வதும் உண்மை தானே என்று தோன்றியது. என்ன? கொடுரமான மிருகம் அல்லவா இந்த காதல். ஒரு முறை வேட்டையாட பட்ட பிறகும், காயங்களை ஆற்றி கொண்டு மறுபடியும் இரையாக தயாராகி விட்டது. எத்தனை முறை காய பட்டாலும் யாரும் காதலிக்காமல் இல்லை. இதில் தாமினி மட்டும் விதி விலக்கா என்ன?


முதல் முறை தவறானவன் கையில் சிக்கி இதயம் நொறுங்கி போனாலும். மறுபடியும் காதல் கொண்டாள். இம்முறை அவள் இதயம் வலி அனுபவிக்குமா இல்லை அவள் வலியை ஏற்படுத்த போகிறாளா?


"உன் மனசுல இன்னும் அவன் இருக்கானா?" ஜார்ஜின் குரல் அவள் சிந்தனைகளை கலைக்க, அவன் கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். 'எப்படி அவன் இப்படி ஒரு கேள்வி கேட்கலாம். அதுவும் நேற்றைய இரவின் கூடலுக்கு பிறகு. இப்படி ஒரு சிந்தனை அவனுள் உதிக்கலாமா?' (அவள் மட்டும் அவனை பற்றி இஷ்டத்திற்கு நினைத்து கொள்ளலாம்.. அவன் ஒரு வார்த்தை கேட்டாள் அது மட்டும் தவறாம்)  அவள் விக்கித்து பார்த்திருக்க, அவனோ, "இல்ல... அன்னைக்கு குடிச்சிட்டு நீ தான் அவனை பார்க்கணும்னு சொன்ன" நான் உன்ன சந்தேக பட்டு இதை கேட்கலை என்னும் வகையில் அவள் பார்வைக்கு பதில் அளித்தான்.


'ஒரே ஒரு நாள் குடிச்சுட்டு நான் படுறா பாடு இருக்கே, அய்யய்யய்யோ முடியலை. இன்னும் என்னென்ன உலரி வச்சேன் தெரியலையே!' என்று உள்ளுக்குள் புலம்பியவள்,


"இல்ல..." என்று தலையை ஆட்டி, "ஒன்னுல்ல இரண்டுல்ல முழுசா பத்து லட்சத்தை அமுக்கிட்டு ஓடுனவனை சும்மா விட முடியுமாஎப்படியெல்லாம் நல்லவன் மாதிரி வேசம் போட்டு என்னை ஏமாத்திட்டான். அவன் மட்டும் என் கையில கிடைச்சா..... என் கையாலையே அடிச்சு அவனை கொன்னுருவேன்" என்றவள் ஒரு கையால் ஜார்ஜ் ஷர்ட்டை பிடித்து கொண்டு, மறுகையால் அவன் தலை முடியை பிடித்து ஆட்ட, அவனுக்கோ அவள் தேடலின் அர்த்தம் இப்போது புரிய, அவள் ஸ்ரீ மீது உள்ள கோபத்தை தன் மீது காட்டி கொண்டு இருப்பதெல்லாம் கருத்திலே ஏறவில்லை, சிரித்து கொண்டு தான் இருந்தான்.


ஏதோ ஆத்திரத்தில் அவளும் நடந்துக் கொண்டாலும், கோபத்தில் தான் செய்த செயலை எண்ணி தலையில் அடித்து கொண்டவள், "சாரி ஜார்ஜ்" என்று அசடு வழிய அவன் கசங்கி போன ஷர்ட்டை நீவி விட்டு, கலைந்து போன தலை முடியை சரி செய்து கொண்டிருக்க, அவனோ ஸ்ரீயை அடித்தே கொல்ல வேண்டும் என்ற அவள் ஆசையை இப்போது நிறை வேற்றி கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டான்.


"உனக்கு அவனை பார்க்கணுமா?" என்று கேட்க, அவளோ "இந்த ஜென்மத்தில மறுபடியும் அவனை பார்க்க வேண்டாம்" அவனை பார்த்து தன் சந்தோசத்தை குழைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் கூறினாள். அதன் பிறகு அவனும் ஸ்ரீ பற்றி தானும் இனி நினைக்க தேவையில்லை என்று முடிவு எடுத்து விட்டான்.


அவள் மன பாரத்தை குறைக்கவே அவனை பற்றி கேட்டான். அவள் எந்த ஒரு குற்ற உணர்விலும் வாழ கூடாது என்பது அவன் எண்ணம்.


அவளுக்கும் இப்போது தான் மனது லேசான உணர்வு. தான் அவனிடம் எதையும் மறைக்கவில்லை. தன் கடந்த காலம் பற்றியும் தன்னை பற்றியும் அவனிடம் கூறிய பிறகே ஏதோ இனம் புரியா நிம்மதி மனதில் பரவியது.


ஜார்ஜோ, தன்னை பற்றி அவள் ஏதும் அறிய விரும்புகிறாளா? என்று "உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?" என்று கேட்க,


அவள் மனமோ, 'இது தான் நல்ல சான்ஸ் உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேளு. அதுக்கு முன்னாடி அவன் ஏன் கல்யாணம் வேண்டாம் சொன்னான். ஒருவேளை அவன் வாழ்க்கைலையும் ஏதாவது பொண்ணு இருக்குமா?' என்று மனதில் நினைத்தாலும், அவள் தலையோ "இல்லை" என்று தான் அசைந்தது.


தன்னை போல் அவனும் வேறு ஒருவரை காதலித்ததாக கூறினால் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் தனக்கு இல்லை என்று நினைத்து அவள் மறுத்து இருக்க, அவனை பற்றி தெரிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பை தவற விட்டாள்.


அவள் கேட்டிருந்தால் இந்த நொடி அவனும் அனைத்தும் கூறி இருப்பான். ஆரம்பத்தில் கல்யாணம் வேண்டாம் என்று மறுத்ததிற்கு அவன் வாழ்வில் ஒன்றல்ல இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் அத்துடன் இப்போது தாமினியால் அவன் கொள்கை அழிக்க பட்டு அவனும் கல்யாணம் செய்து கொண்டான் என்ற உண்மையையும்.


Comments

Popular posts from this blog

உன் காதலின் விலை என்ன ? - 1